RAPIDO டாக்ஸியை தடை செய்ய வேண்டும் : கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு!!
Author: Udayachandran RadhaKrishnan14 March 2022, 1:13 pm
கோவை : டூ-வீலர் டாக்சியை தடை செய்யக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கோவையில் 15 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இதனை நம்பி 15,000 குடும்பத்தினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சமீபகாலமாக ரேபிடோ என்ற பெயரில் டூவீலர் டாக்ஸி இயங்கி வருகின்றன.
இதன் மூலம் பயணிகளை வாடகைக்கு அழைத்து சென்று வருகின்றனர். இதனால் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. கோவை காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் சில இடங்களில் ரேபிடோ டூ-வீலர் மூலம் பயணிகளை ஏற்றுகின்றனர்.
இதனால் எங்களுக்கும், அவர்களுக்குமிடையே சில நேரங்களில் வாக்குவாதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே எங்களது வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க டூவீலர் டாக்ஸியை தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.