ஆ. ராசா சான்றிதழில் இந்து என்றுதான் உள்ளது… சலுகைகளை அனுபவிக்கும் அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் : கொந்தளித்த அர்ஜூன் சம்பத்!!
Author: Udayachandran RadhaKrishnan17 September 2022, 10:17 am
மதுரை காளவாசல் பைபாஸ் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பிரதமர் மோடியின் எட்டாண்டு சாதனை விளக்க புத்தகத்தை வெளியீட்டார்.
தொடர்ந்து அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களை தமிழில் தொகுத்து புத்தகமாக தமிழக மக்கள் அறியும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மின்கட்டண உயர்வு மற்றும் மின் இணைப்பு கட்டணம் உயர்வை கண்டித்தும் இந்து மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றோம்.
மாதம் தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்ற தேர்தல் அறிவிப்பு என்ன ஆயிற்று, அறிவிக்கப்படாத மின் வெட்டால் தொழிலாளர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக இலவச திட்டங்கள் மூலம் பொதுமக்கள் வீடுகளில் உள்ள மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பலவும் பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. மின் வாரியம் ஊழல் வாரியமாகவும், நிர்வாகம் சீர்கேடுகள் நிறைந்தும் உள்ளது.
ஆவின் பால் பொருள்கள் விலை மற்றும் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஆ ராசா இந்து மக்களுக்கு எதிராக அவுதூறு பேசவைத்து திசைதிருப்பும் வேலை செய்து வருகிறது திமுக.
ஆ ராசாவின் சான்றிதழில் இந்து என்றுதான் உள்ளது, இந்து என்ற பெயரில் அரசின் சலுகைகளை பெற்ற அவர் இந்துக்களை இழிவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது அவரை திமுகவில் இருந்து நீக்கி மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாளை பிரதமர் பிறந்த நாள் என்பதை சமூக நீதி நாளாக கொண்டாட உள்ளோம்.
அம்பேத்கர் கொள்கை வழியில் பழங்குடியினர் பட்டியலில் நரிகிறவர்களை சேர்த்து அரசின் உயரிய பதவிகளில் பழங்குடியினர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் முதல்வர். இதன்மூலம் தமிழகத்தில் போலீசாருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்து வருகிறது.
தற்போதைய திமுக ஆட்சி வளர்ச்சி திட்டங்களுக்கு தடையாகவும், பிரிவினை வாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும் அரசாக உள்ளது. பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் வருகிற தேர்தலில் தமிழகத்தில் குறிப்பாக ராமேஸ்வரத்தில் போட்டியிட கோரிக்கை விடுக்கிறேன்.
வன்முறையை ஏற்படுத்தும் வகையில், திராவிடர் கழகத்தினருக்கு போராட்டம் நடத்த ஸ்ரீ ரங்கத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்திய தொழில் அதிபர் உலக அளவில் முதல் இடம் பெற்றது பெருமை கொள்ளப்பட வேண்டியது. அதானி உண்மையான தேசபக்தி கொண்டவர்கள். மோடிக்கு நெருக்கமானவர்கள் மட்டும் கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்பது இடது சாரி கட்சிகளின் பொய் பிரச்சாரம்.
இது அம்பானி, அதானியின் ஆட்சி என்று சொல்வதில் பெருமை கொள்கிறோம், வெளிநாட்டு கம்பெனிகள் கொள்ளையடிப்பதை தடுத்து உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
0
0