கெரோசினால் வந்த பிரச்சினை: காட்டிக் கொடுத்த சிசிடிவி: காவல் துறை அதிகாரி மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை…..
Author: Sudha10 August 2024, 4:32 pm
தென்தமிழகத்தின் கடைசி காவல் நிலையமாக விளங்கி வரும் கொல்லங்கோடு காவல்நிலையத்தின் ஆய்வாளராக தாமஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்
தமிழக கேரள எல்லையை ஒட்டி உள்ள பகுதி என்பதால் ஏராளமான சமூக விரோதிகள் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய ரேசன் அரசி மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றை கடத்தி சென்று விற்பனை செய்து வரும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை பயன்படுத்தி கொண்ட காவல் ஆய்வாளர் தாமஸ் அந்த பகுதியில் உள்ள கடத்தல் கும்பல்களுடன் கைகோர்த்து தொடர்ச்சியாக கடத்துதலுக்கு உடந்தையாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் இது சம்பந்தமாக ரகசியமாக விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று கொல்லங்கோடு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான திருமன்னம் பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த மண்ணெண்ணெய் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் 350 லிட்டர் மண்ணெண்ணையை கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக சாலையோரம் உள்ள ஒரு கடையின் ஓரம் பதுக்கி வைத்திருந்துள்ளனர்
இதனை பார்த்த பொதுமக்கள் காவல் ஆய்வாளர் தாமஸ்க்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் குழுவுடன் வந்த ஆய்வாளர் பதுக்கி வைத்திருந்த மண்ணெண்ணையை பார்த்துவிட்டு பறிமுதல் செய்யாமல் திரும்ப வந்துள்ளார் இதற்கிடையே வேறொரு கும்பல் அந்த மண்ணெண்ணையை யாருக்கும் தெரியாமல் எடுத்துகொண்டு போய் விற்பனை செய்துள்ளனர்.
ரகசிய போலீஸார் அளித்த தகவலின் பேரில் ஆய்வாளர் தாமஸை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்
இந்த சம்பவம் குமரி மாவட்ட போலீசாரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.