கடல் கடந்து வந்து காதலியை கரம் பிடித்த இளைஞர்… திருமணமான மறுநாளே மணப்பெண்ணை கடத்திய உறவினர்கள்.. காவல்நிலையத்தில் கணவன் கண்ணீர்..!!

Author: Babu Lakshmanan
8 September 2022, 4:44 pm

திருச்சி ; சிங்கப்பூரில் இருந்து வந்து கரம் பிடித்த காதலியை, திருமணமான மறுநாளே அவரது உறவினர்கள் கடத்தி சென்று விட்டதாக அப்பெண்ணின் கணவர் போலீஸில புகார் அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள அழிஞ்சி மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கிருபாகரன் (31). இவர் மணப்பாறை அருகே ஆலத்தூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் வேலை பார்த்தபோது, அவருடன் வேலை பார்த்த அழககவுண்டம்பட்டியைச் சேர்ந்த அழகர் என்பவரது மகள் சிவரஞ்சனி (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சிங்கப்பூரில் வேலை கிடைத்ததால் கிருபாகரன் சிங்கப்பூர் சென்றுவிட்டார். சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தாலும் சிவரஞ்சனியுடனான காதல் தொடர்ந்தது. இதற்கிடையே இவர்களது காதல் சிவரஞ்சனி வீட்டிற்கு தெரிய வந்ததால், அவருக்கு வேறு வரன் பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இது குறித்து சிவரஞ்சனி சிங்கப்பூரில் இருந்த கிருபாகரனிடம் தனக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ந்த கிருபாகரன் கடந்த 5ம் தேதி சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்து சிவரஞ்சனியை அழைத்துச் சென்று நேற்று (6ம் தேதி) திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே வீரநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

சிவரஞ்சனிக்கு திருமணம் ஆனது பற்றி தகவல் அறிந்த சிவரஞ்சனியின் உறவினர்கள் 15 பேர் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் இன்று மாலை கிருபாகரனின் வீட்டிற்குச் சென்று வீட்டில் இருந்த சிவரஞ்சனியை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றனர்.
தடுக்க வந்தவர்களை ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து கிருபாகரன் புத்தாநத்தம் காவல் நிலையத்தில் உறவினர்களால் கடத்தப்பட்ட தனது காதல் மனைவியை மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளார். போலீசார் சிவரஞ்சனியை மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கிடையே கிருபாகரனின் உறவினர்கள் காவல்நிலையத்தின் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காதல் மனைவியை கரம் பிடிக்க சிங்கப்பூரில் இருந்து பறந்து வந்து திருமணம் செய்த நிலையில் திருமணமான மறுநாளே மனைவி அவரது உறவினர்களால் கடத்தப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • SAWADEEKA song meaning அட”SAWADEEKA”அர்த்தம் இதுதானா…பங்கம் செய்துள்ள அனிருத்…செம VIBE-ல் அஜித் ரசிகர்கள்..!
  • Views: - 652

    0

    0