நீங்க திமுகவின் கொள்கை பரப்பு செயலாளரா?.. நீதிபதி சந்துருவின் புதிய அவதாரம் குறித்து அண்ணாமலை தாக்கு..!

Author: Vignesh
17 July 2024, 5:11 pm

தனது அறிக்கைக்கு வந்த எதிர்ப்புகளைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல், நீதிபதி சந்துரு, திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக, புதிய அவதாரம் எடுத்துள்ளார். திமுகவின் கொள்கைகளை அறிக்கையாகக் கொடுத்தால், பொதுமக்களிடையே எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வரும் என்பதை, அவர் இனியாவது உணர வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சந்துரு குறிப்பிட்ட, எரிந்து போன யாழ்ப்பாணம் நூலகத்தில் இந்தியப் புத்தகங்களுக்கான பிரத்யேகப் பகுதியை திறந்து வைத்ததும், அதற்கு 16,000 புத்தகங்களை வழங்கிட ஏற்பாடுகள் செய்ததும், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான அரசுதான். அதே யாழ்ப்பாணத்தில், சுமார் 11 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், கலாச்சார மையம் அமைத்ததும், பிரதமர் மோடி அவர்கள் அரசுதான்.

தெருவுக்குத் தெரு டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருக்கும் திமுக அரசின் குழுவில் இருந்து கொண்டு, நூலகம், அறநெறி, கலாச்சாரம் குறித்தெல்லாம் திரு. சந்துரு அவர்கள், எங்களுக்குப் பாடம் நடத்த வேண்டாம் என்று முதலில் கேட்டுக் கொள்கிறேன்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, ஒரு நபர் குழு, இதர குழு எனப் பல குழுக்களில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும் முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களால், அவர் அளித்திருக்கும் அறிக்கைக்கு வந்திருக்கும் எதிர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தெரிகிறது.

சந்துரு அவர்களே. இங்கே எதிர்ப்பு தெரிவித்திருப்பது, தமிழகம் முழுவதும் மாணவ சமுதாயத்தைப் பாதிக்கும்படியான, அரசு அமைத்துள்ள குழுவின் அறிக்கைக்குத்தானே தவிர, நீங்கள் எழுதிய தொடர்கதைக்கோ, நாவலுக்கோ அல்ல. அதற்குப் பதிலளிக்க வேண்டியது தமிழக அரசே தவிர, சந்துரு என்ற தனிநபர் அல்ல.
திமுக ஆட்சிக்கு வரும் முன்னர் ஏன் மாணவ சமுதாயத்தினரிடையே இது போன்ற ஜாதியப் பிரிவினைகள் பெருமளவில் இல்லை என்பதுதான் சந்துரு அறிக்கையின் முதல் கேள்வியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்தக் கேள்வியை முன்வைக்க, பாரபட்சமில்லாத நபராக இருந்திருக்க வேண்டும். அறிக்கையின் பரிந்துரை எண் 19 (c) யில், காவிமயமாக்குதல் (saffronization) என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருக்கும்போதே, உங்கள் அரசியல் நிலைப்பாடும், இந்த அறிக்கையின் நோக்கமும் வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.

சந்துரு அவர்களே. அறிக்கை அளித்ததோடு உங்கள் பணி நிறைவடைந்தது என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். ஜனநாயகத்தில், அரசின் பொதுமக்கள் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிப்பது பொறுப்புள்ள எதிர்க்கட்சிகளின் பணி. திமுகவின் கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்.

அரசியல் பேச வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், திரு. சந்துரு அவர்கள், அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம். அதை விடுத்து, சுயலாபத்துக்காக, அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு, மக்களின் வரிப்பணத்தில், திமுகவின் கொள்கைகளை, குழு அறிக்கை என்ற பெயரில் மாணவ சமுதாயத்தின் மீது திணித்தால், அதற்கான எதிர்ப்பும் நிச்சயம் இருக்கும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அண்ணாமலை அறிக்கையில் கூறியிருந்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி