விவசாய கிணற்றில் தவறி விழுந்த மான்குட்டி: பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக மீட்ட வனத்துறையினர்..!!
Author: Rajesh31 March 2022, 9:19 am
கோவை: நீலாம்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் குட்டியை வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் பத்திரமாக மீட்டு மதுக்கரை வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
கோவை நீலாம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மான்களின் நடமாட்டம் காணப்படும். மேய்ச்சலுக்காக வரும் மான்கள் வழிதவறி அருகே உள்ள கிராமங்கள் வழியாக வந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்வது வழக்கம்.
இந்நிலையில் நீலாம்பூரை அடுத்த பீடம்பள்ளி கிராமத்தில் தங்கராஜ் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்ததை அதன் அங்கிருந்த பணியாளர்கள் பார்த்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் விழுந்த மான்குட்டியை வலை மற்றும் கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர்.
இதை தொடர்ந்து, மான்குட்டியின் உடல் நலம் ஆய்வு செய்யப்பட்டு வனத்துறை வாகனம் மூலம் கொண்டுச் செல்லப்பட்டது. மீட்கப்பட்ட மான்குட்டியை மதுக்கரை வனச்சரகம், எட்டிமடை பீட், மட்டத்து காடு சரகம் காப்புக்காடு பகுதியில் பத்திரமாக விடுவிக்கப்பட்டது.
வழி தவறி ஊருக்குள் வந்த மான்குட்டியை நாய்கள் துரத்தியதால் தவறி கிணற்றிக்குள் விழுந்திருக்கலாம் என்றும் மன்குட்டியின் உடல் நலம் மிகவும் சீராக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்