திடீரென ஆசிரியர் காலில் விழுந்த விஏஓ.. காரணம் இதுவா?
Author: Hariharasudhan17 December 2024, 12:00 pm
திருப்பத்தூர் மாவட்டத்தில், லஞ்சப் பணம் தொடர்பாக ஆசிரியரின் காலில் விஏஓ விழுந்தது தொடர்பாக வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருபத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதி, நாட்றம்பள்ளி அடுத்த சொரக்காயல்நத்தம் சென்றாயன் வட்டத்தைச் சோ்ந்தவர் ரஜினி (32). இவர், தனது வீடு மற்றும் நிலத்துக்குச் செல்வதற்கு பாதை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என சமீபத்தில் திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்து முடிந்த முகாமில் கோரிக்கை மனு அளித்து உள்ளார்.
இந்த மனுவின் பேரில், சொரக்காயல்நத்தம் கிராம நிர்வாக அலுவலா் மாணிக்கம், ரஜினியை அழைத்து விசாரணை மேற்கொண்டு உள்ளார். இதனையடுத்து, அரசு புறம்போக்கு நிலத்தில் பாதை ஏற்படுத்தித் தருவதாக விஏஓ மாணிக்கம் கூறியதாகத் தெரிகிறது.
இதற்காக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆசிரியர் ஒருவரின் முன்னிலையில் ரஜினியிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தை விஏஓ மாணிக்கம் பெற்று உள்ளார். ஆனால், கிராம நிர்வாக அலுவலர் மாணிக்கம் பாதை ஏற்படுத்தித் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி மாணிக்கம், சொரக்காயல்நத்தம் கிராமத்தில் இருந்து பெருமாபட்டு கிராமத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இது குறித்து அறிந்த ரஜினி, டிசம்பர் 11ஆம் தேதி நாட்றம்பள்ளியில் உள்ள ஆசிரியர் வீட்டுக்கு விஏஓ மாணிக்கத்தை அழைத்துச் சென்று உள்ளார்.
இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேஷன் அருகே நடக்கும் செயலா இது? இளம்பெண் கைது!
அப்போது, லஞ்சமாகப் பெற்ற பணத்தைத் திருப்பி தருமாறும், உடனடியாக தரவில்லை என்றால் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளிடம் புகார் செய்வதாகவும் மிரட்டியுள்ளாா். இதனால் அச்சம் அடைந்த கிராம நிா்வாக அலுவலர் மாணிக்கம், ஆசிரியரின் காலில் விழுந்து கெஞ்சி உள்ளார்.
தற்போது, ஆசிரியர் காலில் விழுந்து விஏஓ கெஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இதற்கு விஏஓ மட்டுமல்லாது, பொதுமக்களும் பல்வேறு கேள்விகளையும், கருத்துகளையும் முன்வைத்துள்ளனர். இந்த நிலையில், இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.