புத்தக மூட்டையை சுமக்க அனுப்பினால் அரிசி மூட்டைகளை சுமக்க விடுவதா..? அரசு விடுதியில் அவலம்… விடுதி காப்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு..!!

Author: Babu Lakshmanan
22 June 2023, 12:06 pm

அரசு மாணவர் தங்கும் விடுதியில் பள்ளி மாணவர்களை வைத்து அரிசி மூட்டைகளை இறக்கிய விடுதி காப்பாளருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியில் அரசு பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலும் அணைக்கட்டு அடுத்த அல்லேரி, பீஞ்சமந்தை உள்ளிட்ட மலைப் பகுதிகளைச் சேர்ந்த மலைவாழ் மக்களின் பிள்ளைகள், உயர்கல்வி பயில்வதற்காக இந்த விடுதியில் தங்கியுள்ளனர். இவர்கள், பள்ளிகொண்டாவை சுற்றியுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆர்சிஎம் பள்ளி மற்றும் குடியாத்தம் ரயில் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.

மலை பகுதிகளுக்கு சரியான போக்குவரத்து வசதி இல்லாததால் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிகொணடா பகுதியில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் தங்கும் விடுதியில் தங்கி பயில்கின்றனர்.

இந்த மாணவர்கள் விடுதியில் 50 மாணவர்கள் வரை தங்கும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல அரசு மூலம் இலவச உணவு பொருட்களும், இங்கு தங்கும் மாணவர்களுக்கு சமைத்து வழங்குவதற்காக வழங்கப்படுகிறது.

மாணவர்களுக்கு உணவு தயார் செய்யவதற்காக அனுப்பிய உணவுப் பொருட்களை விடுதியில் தங்கும் மாணவர்களைக் கொண்டே விடுதி காப்பாளர் இறக்கிய அவலம் அரங்கேறி உள்ளது.

மலைப்பகுதியில் ஆரம்ப கல்வியை பயின்ற மாணவர்கள், உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் சுமார் 25 கிலோமீட்டர் அப்பால் உள்ள பள்ளிகளில் சேர்த்து கல்வி பயிலவும், அதேபோன்று சரியான போக்குவரத்து வசதியில்லாததாலும் தங்கள் பிள்ளைகளை அரசு மாணவர் விடுதியில் சேர்த்த பெற்றோர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற செயல்களில் ஈடுபட்ட விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 571

    0

    0