சாலை விபத்தில் சார் ஆட்சியர், 11 வயது சிறுமி பலி…கோவிலுக்கு சென்ற போது கார் டயர் வெடித்து விபத்து : 5 பேர் கவலைக்கிடம்!!
Author: Udayachandran RadhaKrishnan15 April 2022, 11:48 am
கள்ளக்குறிச்சி : கோவிலுக்கு சென்ற மாவட்ட சமூக தனித்துணை ஆட்சியரின் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் சார் ஆட்சியர் மற்றும் பதினொரு வயது சிறுமி உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியராக பணிபுரிந்து வருபவர் ராஜாமாணி. இவரும், இவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஆதி திருவரங்கம் கோவிலுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஓட்டுனர் நசீம்பாருக் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். அப்பொழுது சங்கராபுரம் வட்டாட்சியர் பேருந்து நிறுத்தம் அருகே காரின் முன்பக்க டயர் வெடித்து கார் கம்பத்தின் மீது அதிவேகமாக மோதியுள்ளது.
கம்பத்தின் மீது கார் மோதி நிலைகுலைந்ததில் காரில் பயணம் செய்த மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் கார் கட்டுப்பாட்டை இழந்து கம்பத்தின் மீது மோதும் போது சாலையில் நடந்து சென்ற 3 பேர் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த பதினோரு வயது கோபிகா என்ற சிறுமி சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கோபிகா உயிரிழந்தார். பலத்த காயமடைந்த விக்னேஷ், கிரிஜா,பழனியம்மாள், விக்ரம் ,சிந்து ஆகிய 5பேர் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் விபத்து குறித்து சங்கராபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலுக்கு சென்ற மாவட்ட சமூக தனித்துணை ஆட்சியரின் கார் டயர் வெடித்து மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மற்றும் 11 வயது சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.