கனமழையால் காணாமல் போன சாலை : காட்டாற்று வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிப்பு… ஆக்ரோஷமாக வெள்ளம் பாயும் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan15 அக்டோபர் 2022, 12:30 மணி
சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் மல்லியம்மன் துர்கம் கோவில் அருகே வெள்ளநீர் சாலையை கடந்து செல்கிறது. இதனால் சத்தியமங்கலம் கடம்பூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
சத்தியமங்கலத்திலிருந்து கடம்பூர் செல்லும் மலைப்பாதையில் கெம்பநாயக்கன்பாளையம் சோதனைச்சாவடியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் மிகவும் பிரசித்தி பெற்ற மல்லியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.
கடம்பூர் மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் இக்கோவிலின் அருகாமையில் உள்ள பாறைகள் வழியாக மழைக் காலங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து அருவியாக கொட்டுவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கடம்பூர் மலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மல்லியம்மன் கோவில் அருகே காட்டாற்று வெள்ளம் பாறைகளை தழுவியவாறு அருவியாக கொட்டி சாலையின் குறுக்கே பாய்ந்தோடுகிறது. இதனால் சத்தியமங்கலம் கடம்பூர் சாலையில் அரசு பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு சாலையில் வெள்ளநீர் வடிந்தவுடன் அனைத்து வாகனங்களும் செல்லத் துவங்கியன.
0
0