ரோடும் சரியில்ல.. குடிநீரும் வரதில்ல : காலிக் குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலைமறியல்.. கோவையில் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 March 2023, 1:26 pm

தண்ணீர் கேட்டு கரும்புக்கடை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகராட்சி கரும்புக்கடை, சாரமேடு பகுதி 62 வது வார்டில் மாநகராட்சி நிர்வாகம் தண்ணீரை முறையாக விநியோகிப்பதில்லை என கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மறியலில் ஈடுபட்டிருந்த பெண்கள் திடீரென காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து தண்ணீர் வேண்டும் என கூறி முழக்கங்களை எழுப்பினர்.

சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு மாநகராட்சி நிர்வாகம் முறையாக தண்ணீர் விநியோகம் செய்வதில்லை என தெரிவித்தனர்.

இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறிய அப்பகுதி மக்கள் இதுவரை தங்கள் கவுன்சிலர் கூட தங்களை வந்து சந்திக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும் அப்பகுதியில் சாலைகளும் சீரமைக்கப்படாததால் மழைக்காலங்களில் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக தெரிவித்தனர்.

மேலும் தங்கள் வார்டு கவுன்சிலர், மாநகராட்சி அதிகாரிகள் தங்களை சந்திக்காத வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என தெரிவித்து மறியல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!