அந்த மாதிரி ஐடியா இல்லங்க.. ஐசிசி சாம்பியன் டிராபியில் இந்தியா படைத்த மொத்த சாதனைகள்!
Author: Hariharasudhan10 March 2025, 8:56 am
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
துபாய்: 9வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக டேரில் மிச்செல் 63 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து, 252 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் – ரோகித் சர்மா இணை, அதிரடியாக 100 ரன்கள் வரை பார்ட்னர்ஷிப்பைத் தொடர்ந்தன.
எனவே, முதல் விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்த ஜோடி அசத்தியது. கில் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த ரோகித் சர்மா 76 ரன்களில் ரச்சின் ரவீந்திரா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் கேப்டனாக அதிக ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற சனத் ஜெயசூர்யாவின் வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள ரோகித் சர்மா 2வது இடத்தை பிடித்துள்ளார்.
இதனையடுத்து, இந்தியாவின் அபார பந்துவீச்சில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. இதன் மூலம் 7வது ஐசிசி கோப்பையை இந்திய அணி வென்றது. முன்னதாக, மோசமான கேப்டன் எனக் கூறிய ஷமா முகமது, தற்போது ரோகித் சர்மாவின் கேப்டன்சிக்கு தலைவணங்குவதாக தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளார்.
இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்ற பின்னர், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததைப் போல, தற்போது சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பின்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பை ரோகித் வெளியிடுவார் என்ற தகவல் பரவியது.
இதையும் படிங்க: ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்..
அது மட்டுமல்லாமல், அடுத்த மாதத்துடன் 38 வயது நிறைவடையும் ரோகித் சர்மா, 2027ல் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பினர். ஆனால், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை எனவும், வதந்தியை பரப்பாதீர்கள் எனவும் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றதன் மூலம், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் கேப்டன் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.