சத்தம் கேட்காமலா இருந்திருக்கும்?.. போலீஸ் ஸ்டேஷன் முன்பு உள்ள பூம்புகாரின் பூட்டை ரம்பத்தால் அறுத்து கைவரிசை..!

Author: Vignesh
26 August 2024, 11:26 am

பூம்புகார் விற்பனை நிலையத்தில் பூட்டை உடைத்து ரூ.1.44லட்சம் பணம் கொள்ளை – புற காவல் நிலையத்திற்கு முன்பு நடந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை டவுன்ஹால் புற காவல் நிலையத்திற்கு முன்பு உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் பூட்டை உடைத்து ரூபாய் 1.44லட்ச பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை டவுன்ஹால் பகுதியில் தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் அங்காடியான பூம்புகார் விற்பனையகம் இயங்கி வருகிறது.

வழக்கம் போல் இரவு விற்பனை நிலையத்தை பூட்டிவிட்டு சென்ற மேலாளர் ஆனந்தன் மறுநாள் விற்பனை நிலையத்தை திறப்பதற்கு வரும் போது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் பூட்டை ரம்பத்தால் அறுத்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே வருவதும், பின்னர் ரூபாய் 1,44,877 பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் ஆனந்தன் இந்த கொள்ளை சம்பவம் குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் உக்கடம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் டவுன்ஹால் பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் புற காவல் நிலையத்திற்கு முன்பு இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி