ரூ.100-க்கு ரூம்.. திருச்செந்தூர் பக்தர்கள் கவனத்திற்கு!

Author: Hariharasudhan
10 October 2024, 12:58 pm

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.100-க்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோயில் விளங்கி வருகிறது. இங்கு தென்மாவட்டங்கள் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதில் இருந்தும், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும், கார்த்திகை, சூரசம்ஹாரம், விசு, கிருத்திகை போன்ற முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் சிறப்பு நாட்களில் லட்சக்கணகான பக்தர்கள் கடல் போன்று திருச்செந்தூர் கடற்கரையில் குழுமி இருப்பர்.

இவ்வாறு வரும் பக்தர்கள், தங்களின் வசதிக்கேற்ப அருகில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் தங்கி முருகனை தரிசிப்பர். பலர் கடற்கரை மணற்பரப்பிலே ஓய்வெடுப்பர். இதனிடையே, திமுக ஆட்சி அமைத்த பிறகு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, வணிக வளாகங்கள், பேருந்து நிலையம், தங்கும் விடுதிகள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனால் மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும், பணிகளை விரைந்து முடிக்கும் படியும் பக்தர்கள் தொட்ர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் நடைபெற்று வரும் புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (அக்.9) ஆய்வு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை வருகிற அக்டோபர் 14ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைப்பார் என உறுதி அளித்தார். அது மட்டுமல்லாமல், தெப்பக்குளம் சீரமைக்கும் பணி, அன்னதானக் கூடம் கட்டும் பணி, சரவணப் பொய்கையில் செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்குகள், நடைபாதையுடன் கூடிய நவீன பூங்கா, கருணை இல்லம் மற்றும் வேத பாடசாலை ஆகிய பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவிலுக்கு சென்ற சிறுவனின் பூணூல் அறுப்பு.. இது தான் திராவிட மாடல் ஆட்சியா? கொதிக்கும் எல்.முருகன்!

மேலும் பேசிய அவர், “நவீன வசதிகளுடன் கூடிய 20 சிறப்பு அறைகள், 100 தங்கும் அறைகள் மற்றும் உணவகம் ஆகியவை 540 பேர் தங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்குவதற்கு முன்பு, ‘யாத்ரி நிவாஸ்’ எனப்படும் பக்தர்கள் தங்கும் விடுதியை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். இந்த தங்கும் விடுதிக்கான கட்டணம், தனியார் விடுதியை விட குறைவாக இருக்கும்” எனக் கூறினார்.

அந்த வகையில், அரசு தரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த தங்கும் விடுதியில் 2 ஏர் தங்கக் கூடிய சாதாரண அறைக்கு ரூ.500, 2 பேர் தங்கக் கூடிய ஏசி அறைக்கு ரூ.750 என வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், 10 நபர்கள் மொத்தமாக தங்கக்கூடிய டார்மெட்டரிக்கு ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் தனிநபர் ஒருவர் 100 ரூபாய் கட்டணத்தில் தங்கும் விடுதியில் இருக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த குறைந்த கட்டண தங்கும் விடுதி வசதி திருச்செந்தூர் முருக பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • ajith praise adhik ravichandran after watching good bad ugly movie என்னைய இப்படி காமிச்சிருக்கியேடா- ஆதிக் ரவிச்சந்திரனிடம் அஜித் சொன்ன GBU விமர்சனம்?