ஏழைப்பிணமா அப்போ ரூ.2 ஆயிரம்.. மற்றவர்களுக்கு ரூ.4 ஆயிரம் : பிரேத பரிசோதனைக்கு லஞ்சம்.. கரூர் அரசு மருத்துவமனையின் லட்சணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 March 2022, 4:50 pm

கரூர் : கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் வாங்கும் ஊழியர்களின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அரசு மருத்துவக்கல்லூரியில் ஒப்பந்த ஊழியர்கள் ஒருபுறம் பணியாற்றினாலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஊழியர்கள் ஒருபுறம் என்று பல்வேறு ஊழியர்கள் பலர் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மற்றும் பரிசோதனைக்கு வந்தவர்கள் என்று ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுவும் இங்கு நல்ல முறையில் சிகிச்சை உள்ளது என்று பயனடைந்த பலரும் ஒரு பக்கம் கூறினாலும் மறுபக்கம் தங்கள் வேதனையை கொட்டி குமுறுகின்றனர்.

காரணம், பார்வையாளர்கள் பார்ப்பதற்கு லஞ்சம், பிரசவத்திற்கு லஞ்சம் என்று குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது, மற்றுமொரு குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக சமூக வலைதளங்களிலும் வலம் வருகின்றது.

அதாவது, கரூர் மாவட்ட அளவில், விபத்து மற்றும் தற்கொலை செய்து கொண்டவர்கள் என்று பல்வேறு தரப்பட்ட பிரேதங்கள் வருவதனையொட்டி, பிரேத பரிசோதனைக்கு வரும் பிரேதங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், பிரேதத்தினை பரிசோதனை செய்வதற்கு ஏழைகள் என்றால் ரூ 2 ஆயிரம் மற்ற பிரேதங்கள் என்றால் ரூ 4 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் என்று சவக்கிடங்கு ஊழியர்கள் அநியாய லஞ்சம் வாங்கும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது.

இதனையொட்டி அந்த பிரேத பரிசோதனை செய்பவர்கள், பிரேதத்தினை கொண்டு வருபவர்களிடம் வாங்கும் பணம், சரக்கு மற்றும் பிரேதம் கட்டும் துணிகளுக்கு என்று கூறப்படும் நிலையில், அடையாளம் தெரியாத பிரேதத்திற்கு கூட இந்த பணம் கட்டாயமாம்.

காவல்துறை மற்றும் ரயில்வே காவல்துறையினர் மட்டுமில்லாது அந்த பிரேதத்தினை கொண்டு வரும் ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் கூட வாங்கி விட்டு தான் பிரேத பரிசோதனை செய்வார்களாம் என்றால், இந்த விஷயம் கண்டும் காணாமல் விட்டு வரும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இங்கு மட்டும் ஏன் ? கவனம் செலுத்தவில்லை என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.

ஆக, கரூர் மாவட்ட நிர்வாகம் இதனை தீவிர கவனம் செலுத்த வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்துள்ளது. ஏனென்றால், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரும் ஒரு மருத்துவர் ஆவார் என்பதினால் கூடுதல் அக்கறை காட்ட வேண்டுமென்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள் மற்றும் நடுநிலையாளர்கள்.

  • Ethirneechal 2 cast updates விஜய் டிவியில் இருந்து சன் டிவி-க்கு தாவிய நடிகை…அப்போ எதிர்நீச்சல் 2 வில்லி இவுங்க தானா..!
  • Views: - 1469

    0

    0