போலி தங்கக்கட்டி கொடுத்து மோசடி: தம்பதியிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் பறிப்பு…3 பேர் கைது..!!

Author: Rajesh
28 January 2022, 3:48 pm

கோவை: கிணத்துக்கடவு அருகே போலி தங்கக்கட்டி கொடுத்து தம்பதியிடம் ஐந்து லட்சம் ரூபாய் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம் முதலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சேக் அலாவுதீன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவருக்கு, கடந்த 20ம் தேதி தொலைபேசி மூலம் தங்களிடம் 2 கிலோ எடை கொண்ட தங்க கட்டி இருப்பதாகவும், அதன் மதிப்பு 15 லட்சம் என்றும் தங்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு தருவதாகவும் கூறி, தங்க கட்டி வேண்டுமென்றால் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளனர்.

இதை நம்பிய ஷேக் அலாவுதீன் மற்றும் அவரது மனைவி நெசிலா இருவரும் 5 லட்சம் பணத்துடன் இரவு 9 மணிக்கு கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு நின்று கொண்டிருந்த மூன்று பேரிடம் 5 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு 2 கிலோ தங்கம் கட்டியை வாங்கி வந்துள்ளனர்.

இதையடுத்து, நேற்று அந்தக் கட்டியை எடுத்து சோதனை செய்தபோது, அது தங்கமுலாம் பூசிய உலோக கட்டி என்பது தெரியவந்தது. பின்னர் பணத்தை பறிகொடுத்தவர்கள் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவுபடி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ், முதல் நிலை காவலர்கள் வினோத் சர்மா மெக்குரி, பிரபு ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து, போலி தங்கக்கட்டி கொடுத்து பணத்தை பறித்து கும்பலை தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று பொள்ளாச்சி ஆழியாறு சாலையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கும் படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் போலி தங்கக்கட்டி கொடுத்து ஐந்து லட்ச ரூபாய் பறித்துச் சென்ற கும்பல் என்பது தெரியவந்தது.

இதையடுத்து ,பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியை சேர்ந்த நிஜம் என்ற சின்னபாபா, சூளேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்த உசேன் அலி, ஆனைமலை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ஐந்து லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, கைது செய்த 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

  • Raghuvaran Fall in love With Famous Actress பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!