கோவையில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் : அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், வணிக வளாகங்களுக்கு புதிய உத்தரவு!!
Author: Udayachandran RadhaKrishnan25 June 2022, 6:21 pm
கோவை : மாஸ்க் அணியா விட்டால் 500 ரூபாய் அபராதம் கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில், கொரோனா நோய்தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களைத் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தபட்டது.
மேலும் சுகாதரத்துறைக்கு, நாளொன்றுக்கு செய்யப்படும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிகளை முழுமையாக பின்பற்ற உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களின் நிர்வாகத்தினர் அவ்விடங்களில் உள் நுழைபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யவும், கிருமி நாசினி வைக்கவும் மற்றும் தொடர்ச்சியாக கிருமி நாசினி தெளித்தல் பணியினை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருக்கும் நபர்களுக்கு, பொது சுகாதார சட்டத்தின் கீழ் ரூபாய் 500/- அபராதமாக வசூலிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்று கண்டறியபட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பற்றிய பட்டியலை சேகரித்து அவர்களை தனிமைபடுத்தும் பணியினையும் தீவிரபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் உருமாற்றத்தை உடனுக்குடன் கண்டறிய, வெளிநாடுகளில் இருந்து எவரேனும் நோய்தொற்றுடன் வந்தால், அவர்கள் மாதிரியை மரபணு பகுப்பாய்வு செய்திடவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.