பெண்ணின் வயிற்றில் “அயன்” பட பாணியில் கடத்தி வரப்பட்ட 90 போதை மாத்திரைகள் பறிமுதல்..!

Author: Vignesh
17 December 2022, 9:54 am

சென்னை: சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து ரூ.6 கோடியே 31 லட்சம் மதிப்புள்ள 902 கிராம் போதை மாத்திரைகளை கடத்தி வந்த கென்யா நாட்டு பெண்ணை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது கென்யா நாட்டை சேர்ந்த 30 வயது பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவர் மருத்துவ விசாவில் சென்னை வந்ததாக கூறினார். மேலும் அவரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.

அந்த பெண், தனக்கு வயிற்று வலி இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்திருப்பதாக கூறினார். ஆனால் அவரிடம் மருத்துவ சிகிச்சைக்கான சான்றுகள் இல்லாததால் அவர் மீது அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.

உடனே அவரை எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது, அவரது வயிற்றில் அதிகளவில் மாத்திரைகள் இருப்பதை கண்டுபிடித்தனர். உடனடியாக அவைர மருத்துவமனையில் அனுமதித்து இனிமா கொடுத்து, அவரது வயிற்றில் இருந்து 90 மாத்திரைகள் எடுத்தனர்.

பரிசோதனை செய்ததில் விலையுர்ந்த போதை பவுடரை மாத்திரை கேப்சூல்களில் மறைத்து, அவற்றை விழுங்கி வயிற்றில் மறைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.6 கோடியே 31 லட்சம் மதிப்புள்ள 902 கிராம் போதை பவுடரை பறிமுதல் செய்தனர்.

இவற்றை கடத்தி வந்த கென்யா நாட்டு பெண்ணை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர் யாருக்காக போதை பவுடரை கடத்தி வந்தார்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? சர்வதேச கடத்தல் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளதா? சென்னையில் உள்ள கடத்தல் போதை கும்பல் யார்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் கடந்த 3 மாதங்களில் இதுவரை ரூ.130 கோடி மதிப்புள்ள கோக்கைன், ஹெராயின் பிடிபட்டு வெனிசூலா, அங்கோலா, தான்சானியா நாட்டு பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 433

    0

    0