சொத்துமதிப்பு சான்று வழங்க ரூ.60 ஆயிரம் லஞ்சம் : கையும் களவுமாக பிடிபட்ட வட்டாச்சியர் கைது..!
Author: kavin kumar29 January 2022, 7:24 pm
திருப்பூர் : காங்கேயத்தில் சொத்துமதிப்பு சான்று வழங்க லஞ்சம் கேட்ட காங்கேயம் வட்டாட்சியர் குறித்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறி வைத்து கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகம் திருச்சி-கோவை சாலையில் உள்ளது. இங்கு வட்டாட்சியராக இருப்பவர் சிவகாமி. இந்நிலையில் காங்கேயம் பகுதியை சேர்ந்த ஒருவர் ஒப்பந்த தொழில் துவங்க ரூ.75 லட்சத்திற்கான சொத்துமதிப்பு சான்றிதழ் வழங்க கோரி காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தினை பரிசீலனை செய்ய தனக்கு ரூ.1.50 லட்சம் லஞ்சம் அளிக்குமாறு வட்டாச்சியர் சிவகாமி அவரிடம் கேட்டுள்ளார். புகார் தாராரோ தன்னால் அவ்வளவு பணம் தர முடியாது என்று சொல்லவே ரூ.60 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என கேட்டுள்ளார்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் அந்த நபர் புகார் அளித்தார். அவர்கள் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி புகார்தாரர் இன்று வட்டாச்சியர் கேட்ட பணத்தை கொடுக்க சென்றுள்ளார். அவரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பிவிட்டு லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார் பொதுமக்கள் போல வட்டாச்சியர் அலுவலகத்தில் நின்றிருந்தனர். பணத்தை புகார்தாரரிடம் இருந்து வட்டாச்சியர் வாங்கும் போது தயாராக அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கைது செய்தனர். நீண்டநேர விசாரணைக்கு பின்பு கைது செய்து அழைத்து சென்றனர்.