தடையின்மை சான்று வழங்க ரூ.9 லட்சம் கையூட்டு : லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கிய வணிகவரித்துறை அலுவலர், எழுத்தர்!!
Author: Udayachandran RadhaKrishnan6 May 2022, 10:16 pm
திருப்பூர் : தடையின்மை சான்றுக்கு ரூ. 9 லட்சம் லஞ்சம் பெற்ற திருப்பூர் வணிகவரித்துறை அலுவலர் மற்றும் எழுத்தர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் குமரன் சாலையில் உள்ள வணிகவரித்துறை இரண்டாம் மண்டல அலுவலகத்தில் வணிகவரித்துறை அலுவலராக பணியாற்றி வருபவர் ஜெயகணேஷ்.
இவரிடம் திருப்பூரில் தொழில் நடத்தி வந்த கோவையை சேர்ந்த குணசேகரன் என்பவர் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத சூழலில் நிறுவனத்தை மூடிவிட்டு வங்கியில் வழங்குவதற்காக ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவை அடங்கிய வணிகவரித் துறை அலுவலகத்தில் சி-படிவம் சமர்ப்பித்து பணம் பெற தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார் .
தடையின்மைச் சான்று வழங்க வணிக வரித்துறை அலுவலர் ஜெயகணேஷ் 7 லட்சமும் , எழுத்தராகப் பணிபுரிந்து வந்த ரத்னா 2 லட்சமும் லஞ்சமாக கேட்டுள்ளார் . இதையடுத்து குணசேகரன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழங்கிய பணத்தை குணசேகரன் இன்று ஜெயகணேசிடம் , ரத்தினாவிடமும் தந்தபோது அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் பெற்ற ஜெயகணேசையும் , ரத்னாவையும் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.