நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு முதன்முறையாக நடந்த ஆர்எஸ்எஸ் பேரணி : 45 இடங்களில் போலீசார் குவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan16 April 2023, 7:25 pm
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து கடந்த 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து இன்று தமிழகத்தின் 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
காவல்துறையின் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த ஊர்வலம் நடைபெறுகிறது. 3 கி.மீ தூரம் வரை இந்த ஊர்வலம் நடைபெற்று முடிவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் தொடங்கிய பேரணி நான்கு முனை சந்திப்பு, பிஎஸ்என்எல் அலுவலகம் வழியாக காமராஜ் சாலை மற்றும் திருவிக சாலையை அடைந்து காந்தி சிலை வழியாக பழைய பேருந்து நிலையத்தில் பேரணி நிறைவடைகிறது. பேரணியை தொடர்ந்து பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை காசாங்குளம் பகுதியில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில் மூன்று டிஎஸ்பி க்கள் தலைமையில் அதிரடிப்படை வீரர்கள் மற்றும் போலீசார்கள் 500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் நாகராஜா திடல் பகுதியில் இருந்து துவங்கும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம், அங்கிருந்து வேப்பமூடு சந்திப்பு, செட்டிக்குளம் வழியாக தெ.தி.இந்து கல்லூரி மைதானத்தில் நிறைவடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. பேரணி செல்லும் பாதைகள் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகள் என 200 க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
அதேபோன்று, திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் ஆர்எஸ்எஸ் பேரணி துவங்கியது. நாகை மாவட்டத்தில், வேதாரண்யம் அடுத்துள்ள அகஸ்தியன் பள்ளியில் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் துவங்க உள்ள நிலையில், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. ஜவஹர் தலைமையில், 1 கூடுதல் துணை கண்காணிப்பாளர்,6 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 10 ஆய்வாளர்கள் தலைமையில் 350 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரையில், ஆர்எஸ்எஸ் சார்பில் வீர சிவாஜியின் 350 ஆவது முடிசூடிய விழா மற்றும் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் புறநகர் பேருந்து நிலையம் அருகில் இருக்கக்கூடிய ராஜாஜி சிலையிலிருந்து ஆரம்பிக்கக்கூடிய அணிவகுப்பு ஊர்வலம் நகர் பேருந்து நிலையம், தேவர் சிலை, அரசு மருத்துவமனை வழியாக சென்று மீண்டும் ராஜாஜி சிலையில் முடிவடையும். அதனைத் தொடர்ந்து பொதுக்கூட்டம் ராஜாஜி சிலை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய மேடையில் நடைபெற உள்ளது.
ஆர்எஸ்எஸ் என் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் பதஞ்சலன் ஊர்வலம்
சத்ரபதி வீரசிவாஜியின் 350 ஆவது முடி சூட்டிய விழா அம்பேத்கரின் பிறந்தநாள் விழா வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவினை மூத்த தலைவர் எச். ராஜா அவர்கள் துவக்கி வைக்க உள்ளனர். இந்த அணிவகுப்பு பொன்னையராஜபுரம், தியாகி குமரன் வீதி.. தாமஸ் வீதி வழியாக ராஜா வீதி தேர்முட்டி திடலில் சென்றடைகிறது. இந்தப் அணிவகுப்பில் 2000 பேர் கலந்து கொள்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ் கொடிக்கு ஸ்வயம் சேவகர்கள் மரியாதை செலுத்திய பின்பு இந்த ஊர்வலம் துவங்கப்படுகிறது. சுவயம் சேவகர்கள் பேண்ட் வாத்தியங்களுடன் அணிவகுப்பு செய்து வருகின்றனர்.பாதுகாப்புக்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.