மரணமடைந்த ஜெயக்குமார் கடிதத்தில் ரூபி மனோகரன் பெயர்.. பின்னணியில் சதி? அபாண்டமாக பழி..!!

Author: Udayachandran RadhaKrishnan
4 May 2024, 6:38 pm

மரணமடைந்த ஜெயக்குமார் கடிதத்தில் ரூபி மனோகரன் பெயர்.. பின்னணியில் சதி? அபாண்டமாக பழி..!!

நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பாக, நெல்லை மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், குமரியைச் சேர்ந்த ஊராட்சிமன்ற தலைவர் அனந்தராஜா தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக குறிப்பிட்டுள்ளார். அப்போது, நிலத்தை அபகரிக்கும் நோக்கில் அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், குத்தாலிங்கம் என்பவர் ஏற்கனவே திரும்ப கொடுத்த கடனை, மீண்டும் கேட்டு மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன், 3 வருடங்களாக தன்னிடம் இருந்து ரூ.70 லட்சம் வாங்கி விட்டு, எந்த வேலையையும் செய்யவில்லை என்றும், எம்பி தேர்தலில் கூட ரூபி மனோகரன் சொல்பேச்சை கேட்டு ரூ.8 லட்சம் செலவு செய்ததாகவும், அந்தப் பணத்தையும் அவர் தரவில்லை என்றும், மொத்தம் ரூ.78 லட்சத்தை கேட்டதற்கு ரூபி மனோகரன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: நெல்லை காங்., தலைவர் விவகாரத்தில் மட்டுமல்ல.. காவல்துறையை LEFT & RIGHT வாங்கிய ராமதாஸ்!

தேர்தலுக்காக காங்கிரஸ் நிர்வாகியும், முன்னாள் மாநில தலைவருமான கேவி தங்கபாலு ரூ.11 லட்சம் வாங்கியதாகவும், அந்தப் பணத்தை ரூபி மனோகரனிடம் வாங்கி கொள்ளுமாறு தங்கவேலு கூறியதாகவும், அதன்படி கேட்டால் அந்தப் பணத்தையும் அவர் தரவில்லை என்று கூறியுள்ளார். மேலும், CCM பள்ளி தாளாளர் ஜேசுராஜா ரூ.30 லட்சம் தராமல் ஏமாற்றி விட்டதாகவும், தன்னுடைய தார் பிளாண்டை முறைகேடாக அவர் விற்று விட்டதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக கேட்டதற்கு ஜேசுராஜாவும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக நாங்குநேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜெயக்குமார் எனக்கு மிக நெருங்கிய நண்பர். எங்கள் கூட்டணி வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர், நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் இருவரும் ஒன்றாக வேலை செய்தோம்.

அவரது இழப்பு எனக்கும், கட்சிக்கும் மிகப்பெரிய இழப்பு என்றார். பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக உங்கள் மீது புகார் உள்ளது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அதில் உண்மை இல்லை. அவருக்கும் எனக்கும் இடையில் பணம் கொடுக்கல் வாங்கல் எதுவுமில்லை. என் மீது வேண்டுமென்றே பழி போட வேண்டும் என்று யாரோ பின் புலமாக இருந்து வேலை செய்வதாக எனக்கு தோன்றுகிறது.

உண்மை என்ன என்று காவல்துறை நிச்சயம் கண்டுபிடித்து விடுவார்கள். நாங்கள் நெருங்கிய நண்பர்கள். எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடுகளுமே கிடையாது. நாங்கள் அண்ணன், தம்பி போல இருந்தோம். இந்த மரணம் தொடர்பாக என் மீது உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகி வருகிறது. காவல்துறையின் விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு தருவேன்.

எனக்கும் ஜெயக்குமாருக்கும் வரவு செலவு நடந்தது இல்லை. நாங்கள் அண்ணன், தம்பி போல்தான் பழகினோம். கடைசி வரை நண்பர்களாக இருந்தோம். இதன் பின்புலத்தில் யாரோ செயல்படுவதாக தெரிகிறது. ஆனால் யார் என்று தெரியவில்லை. நான் நாங்குநேரி தொகுதியில் சிறப்பாக செயல்படுவது சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.

  • meiyazhagan Movie OTT audience VS Theater audience மெய்யழகன்: ஓடிடி vs தியேட்டர் Audience Problem?
  • Views: - 263

    0

    0