ஒப்பந்தப் பணிகளில் தலையிடும் ஆளுங்கட்சியினர்? உருட்டல், மிரட்டலால் தலைதெறிக்க ஓடும் ஒப்பந்ததாரர்கள்…!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2024, 3:44 pm

ஒப்பந்தப் பணிகளில் தலையிடும் ஆளுங்கட்சியினர்? உருட்டல், மிரட்டலால் தலைதெறிக்க ஓடும் ஒப்பந்ததாரர்கள்!

கடந்த 2022ஆம் ஆண்டு RP Infratech என்ற நிறுவனத்தை தொடங்கியவர் பத்மநாபன் கலைவாணன். இவர் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மேற்பார்வையாளர் போல இருப்பதாகக் கூறப்படுகிறது. அறிவாலயம் பத்மாநாபன் என்று அழைக்கப்படும் இவர், ஆளுங்கட்சியை சேர்ந்த பினாமி என்று கூறப்படுகிறது.

2022ஆம் ஆண்டு முதல் இன்று வரை பல நிறுவனங்கள் இல்லாமல் போனதற்கு காரணமே இந்த பத்மநாபன் தான் என்று சொல்லப்படுகிறது.

ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனங்களிடம் மணல் மற்றும் ஜல்லி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை, நான் தான் சப்ளை செய்வேன் எனக் கூறி, அந்த நிறுவனங்களை சுதந்திரமாக செயல்பட முடியாமல் நெருக்கடி கொடுப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், ஒப்பந்ததாரர்கள் தோண்டும் மண்ணை விற்பனை செய்வதிலும் இவரது தலையீடு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், கட்டுமானப் பொருட்களை ஏற்றி, இறக்குவதற்கு தேவையான லாரி உள்ளிட்ட வாகனங்களை தன்னிடம் பெற வேண்டும் என்று கூறி, அதிக கமிஷனுக்காக ஒப்பந்ததாரர்களை மிரட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

ஆளுங்கட்சி என்று கூறி அனைத்து ஒப்பந்ததாரர்களையும் மிரட்டி தனது நிறுவனத்திற்கு சாதகமான பணிகளை செய்து வருவதால் சொந்தக் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

TNEB-யில் WET ASH எடுப்பதற்கான டெண்டர் மற்றும் ஏலம் கோரப்பட்டிருந்தது. இதில், அறிவாலயம் பத்மநாபனின் RP Infratech நிறுவனம் உள்பட 18 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இந்த நிலையில், தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி TNEB-யில் டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களின் பட்டியலை வாங்கி, ஒவ்வொரு ஒப்பந்ததாரரையும் தனித்தனியே தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இதனால், யாரையும் ஒப்பந்த பணிகளை எடுக்கவிடாமல், இந்த டெண்டரை RP Infratech நிறுவனம் தன்வசப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும், ஒப்பந்ததாரர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டிய சூழலில், அவர்களின் விபரம் எப்படி பத்மநாபனின் கைகளுக்கு சென்றது என்ற கேள்வியும், அதிர்ச்சியும் சக ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, அறிவாலயம் பத்மநாபனின் இந்த அட்டகாசத்தில், ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவரே பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், இந்த விவகாரம் தற்போது வெளியே தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில், எந்த நிறுவனம் டெண்டர் எடுத்தாலும், மிரட்டி ஒப்பந்த வேலையை தனது நிறுவனத்துக்கு கொண்டு வருவதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளதாக இந்நிறுவனம் மீது ஒப்பந்ததாரர்கள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். டாடா நிறுவனம் எடுத்த ரோடு காண்ட்ராக்டை மிரட்டல் விடுத்து தன் வசப்படுத்தி, பில் தொகையும் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்காக, சென்னையில் பிரபல ரவுடியை கூலியாளாக வைத்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. லஞ்சம் வாங்காத அதிகாரிகளை மிரட்டி பணியவைப்பதாகவும், பல வருடங்களாக ஒப்பந்த பணிகளை செய்து வரும் நிறுவனங்கள் பீதியில் உள்ளனர்.

பத்மநாபனின் மிரட்டலால் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி, மின்சார வாரியம் என முக்கிய அரசுத் துறையே நடுங்கிப் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து ஒப்பந்ததாரர்கள் தரப்பில் கூறியதாவது, சினிமா படத்தில் வரும் ரவுடிகளை விட மோசமாக ஆளுங்கட்சியின் பினாமி பத்மநாபன், மிரட்டி பல கோடி ரூபாய் ப்ராஜெக்ட்களை வாங்குவதாகவும், செந்தில் பாலாஜி போல இவர்களும் வசமா சிக்குவார்கள் என கூறினர்.

மேலும், ஆளுங்கட்சியின் அலுவலகத்தில் இருப்பவரே இப்படி செய்தால் இதை யாரிடம் முறையிடுவது என்பதே தெரியவில்லை என்றும், எத்தனை பேரை மிரட்டி எவ்வளவு டெண்டர் வேலைகளை ஆக்கிரமித்தார்கள் என்பது தெரியவில்லை. அரசாங்கத்துறை வேலைகளில் நடக்கும் இந்த மோசடி குறித்து அமலாக்கத்துறைக்கும் விஜிலென்ஸ் காவல்துறைககு புகார் சென்றுள்ளது.

விசாரணை நடைபெற்றால் பெரிய பெரிய முறைகேடுகள் எல்லாம் வெளிச்சத்துக்கு வரும்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 316

    0

    0