தோனி, சச்சின் போன்ற பல வீரர்களை கிராமப்புறங்களில் உருவாக்கும் சத்குரு : நடிகர் சந்தானம் புகழாரம்! 

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2023, 5:40 pm

“கிராமங்களில் இருந்து வருங்காலத்தில் தோனி, சச்சின் போன்ற பல வீரர்கள் உருவாக,  தேவையான களத்தை கையில் எடுத்திருக்கிறார் சத்குரு என பாராட்டி பேசினார்” நடிகர் சந்தானம். ஈஷா கிராமோத்சவம் திருவிழா 15 ஆவது  முறையாக நடைபெறுவதை தொடர்ந்து அதன் இறுதி போட்டிகள் கடந்த மாதம் செப் 23 அன்று கோவை ஆதியோகி முன்பாக நடைபெற்றது.

ஆகஸ்ட் மாதம் தொடங்கி மாவட்டம் மற்றும் மண்டல அளவில் நடைபெற்ற கிராமோத்சவம் போட்டியில் சுமார் 25,000 கிராமங்களில் இருந்து 60,000 வீரர்கள் பங்கேற்று விளையாடினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரு.55 லட்சத்திற்கு மேற்பட்ட பரிசு தொகைகள்  பரிசாக வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கோவை ஆதியோகி முன்பு நடைபெற்ற இறுதிப் போட்டியின் போது அதில் சிறப்பு விருந்தினர்களாக,  மத்திய விளையாட்டுதுறை அமைச்சர் திரு. அனுராக் தாகூர், முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் திரு.தன்ராஜ் பிள்ளை மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இந்த நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் பேசியதாவது,  “கிராமப்புற இளைஞர்களை, பெண்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 15 ஆண்டுகளாக ஈஷா கிராமோத்சவத்தை நடத்தி வருகிறார் சத்குரு. என் பள்ளி காலத்தில் எனக்கு படிப்பை காட்டிலும் நடிப்பு, நடனம் என கலைகள் நன்றாக வந்ததை கண்டறிந்த என் ஆசிரியர் என்னை ஊக்கப்படுத்தினார். அது தான் சினிமாவுக்குள் நான் வர தூண்டுகோலாக இருந்தது. அதுப்போல் படிப்பை தவிர மற்ற துறையில் ஆர்வம் உள்ளவர்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் விளையாட்டின் மீது ஆர்வம் உள்ளவர்களை கண்டறிந்து , அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். இளைஞர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவது குறித்த பரவலான செய்திகளை தற்போது பார்க்கமுடிகிறது. அவர்களை மடை மாற்ற பெரும் உந்து சக்தியாக இருப்பது இந்த விளையாட்டு தான்.அதை சரியாக கையில் எடுத்து நமக்கு கொடுத்திருக்கிறார் சத்குரு. இந்த பெருமை, புகழ் அனைத்தும் அவரையே சேரும். அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வது நம் பெருமை” என புகழாரம் சூட்டினார்.

மேலும் இந்நிகழ்வில் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற  பெண்கள் த்ரோபால் அணி மற்றும் பெண்கள் கபடி அணியினருக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி