கோவையைத் தொடர்ந்து சேலத்திலுமா..? ரிலையன்ஸிடம் கைமாறும் ஆவின் நிர்வாகம்..? வெளியான பகீர் தகவல்… பால் ஏஜெண்டுகள் அப்செட்!!

Author: Babu Lakshmanan
17 November 2022, 4:51 pm

சேலத்தில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை விநியோகம் செய்யும் உரிமத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை விநியோகம் செய்யும் உரிமத்தை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க இருப்பதாக அந்த ஒன்றியத்தின் பொதுமேலாளர் ராமநாதன் அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அந்த மாவட்டத்தில் பல்வேறு ரிலையன்ஸ் மார்ட் கடைகளில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மிக, மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவையை அடுத்து சேலம் மாவட்ட ஆவினிலும் காலடி பதிக்கும் பணிகளை ரிலையன்ஸ் ஸ்மார்ட் தொடங்கியுள்ளது. சேலம் ஒன்றிய கூடுதல் பொதுமேலாளர் பிரவீனா அவர்களோடு ரிலையன்ஸ் மார்ட் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், 50 லட்சம் ரூபாய் வங்கி உத்தரவாதத்தோடு, முதலில் 40 லட்சம் ரூபாய்க்கு ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் கொள்முதல் செய்ய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே 2000ம் ஆண்டுக்கு முன்பு சென்னையில் பால் முகவர்களோடு நேரடி வர்த்தக தொடர்புகளை கொண்டிருந்த ஆவின் நிர்வாகம், அதனை துண்டித்து விட்டு தங்களின் முறைகேடுகளுக்கு சாதகமான மொத்த விநியோகஸ்தர்கள் (WSD) எனும் இடைத்தரகர்கள் முறையை கொண்டு வந்தது.

அது போல தற்போது மாவட்ட ஒன்றியங்களில் பால் முகவர்களோடு இருக்கும் நேரடி வர்த்தக தொடர்புகளை துண்டித்துக் கொள்ளவும், சென்னையைப் போன்று மற்ற மாவட்டங்களில் கொண்டு வந்து தாங்கள் பலனடைவதற்கான அச்சாரத்தை, கோவையை தொடர்ந்து சேலத்திலும் போடத் தொடங்கியிருக்கிறது ஆவின் நிர்வாகம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ரிலையன்ஸ் நிறுவனத்தோடு கூட்டு வணிகம் செய்ய முயற்சிப்பது ஆவினுடைய அழிவிற்கே வழிகோலும். ஏனெனில், ஓங்கி உயரமாய் வளர்ந்த மரத்தின் கீழ் விதைக்கப்படும் விதைகள் முளைக்க வேண்டுமானால் செய்யுமே தவிர, அவை மரமாக எப்பொழுதும் வளராது என்பதை ஆவின் நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆவினுடைய வளர்ச்சியில் மிகப்பெரும் பங்காற்றி வரும் பால் முகவர்களை புறக்கணித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்களோடு கைகோர்க்க ஆவின் நிர்வாகம் நினைக்குமானால், அதன் அழிவை அதிகாரிகள் உருவாக்கி வருகிறார்கள் என்பதை தமிழக அரசுக்கு உணர்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 1326

    9

    3