ஜிம்மில் அதிக வொர்க் அவுட்.. உடற்பயிற்சி கூட உரிமையாளருக்கு நேர்ந்த சோகம்!
Author: Hariharasudhan19 November 2024, 4:24 pm
சேலத்தில் அதிக உடற்பயிற்சி செய்ததால் ஜிம் உரிமையாளர் உயிரிழந்த செய்தி உடற்பயிற்சி மேற்கொள்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்: சேலம் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகாதிர் மகமுத். 35 வயதாகும் இவர், 31வது வார்டு திமுக முன்னாள் செயலாளர் ஆவார். இவர் சேலம் குகை ஆற்றோர வடக்குத் தெருவில், சொந்தமாக உடற்பயிற்சி நிலையம் (Gym) நடத்தி வந்தார். இவருக்கு திருமணமான நிலையில், அவருடைய மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்து உள்ளார். மேலும், இவரும் தனது ஜிம்மில் தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்து உள்ளார்.
அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சேட்டு என்ற மகாதிர் மகமுத், ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு உள்ளார். பின்னர், இரவு 8 மணி அளவில் ஜிம்முக்கு வந்த அனைவரும் உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு சென்றுவிட்டனர். ஆனால், சேட்டு மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்து உள்ளார். பின்னர் அங்கு உள்ள குளியல் அறைக்குச் சென்று குளிக்க ஆரம்பித்துள்ளார் சேட்டு.
ஆனால், அவர் வெகுநேரமாகியும் வரவில்லை. இதனால் அவருக்காக காத்திருந்த அவரது ஓட்டுநர், ஜிம்முக்குள் சென்று பார்த்துள்ளார். அங்கு அவர் இல்லாததால், குளியல் அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு தண்ணீர் சத்தம் கேட்டதால், குளித்துவிட்டு வருவார் என காத்திருந்துள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் சத்தம் ஏதும் கேட்காததால் கத்தி கூப்பிட்டுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து, சேட்டுக்கு என்னவாயிற்று என பார்த்தனர்.
பின்னர் கதவை உடைத்து பார்த்தபோது, அவரது மூக்கு மற்றும் காதில் இருந்து ரத்தம் வழிந்து உள்ளது. இதனை அடுத்து, அவரை உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவில் கருவறையில் மது அருந்திய பூசாரி… போட்டோவுக்கு போஸ்.. ஷாக் வீடியோ!
பின்னர், இதுகுறித்து அறிந்த போலீசார் விரைந்து, உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ” அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்ட அவர், பின்னர் நீராவியில் குளித்து உள்ளார். இதனால் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்ததில் அவர் இறந்திருக்கலாம்” எனக் கூறி உள்ளனர்.