4 மாத கர்ப்பிணி பெண் சாக்கடையில் விழுந்து பலி.. வாந்தி எடுக்க சென்ற போது நிகழ்ந்த பரிதாபம்… அதிர்ச்சியில் குடும்பம்!!

Author: Babu Lakshmanan
1 April 2023, 12:04 pm

சேலத்தில் நான்கு மாத கர்ப்பிணி பெண் சாக்கடையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் உடையாபட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டியில் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி சந்தியா. இவர் தற்போது 4 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், திடீரென சந்தியாவிற்கு வாந்தி வந்ததால் வீட்டின் முன்பு இருந்த சாக்கடையில் வாந்தி எடுத்துள்ளார். அப்போது, திடீரென மயங்கி சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் யாரும் இதனை பார்க்கவில்லை.

இதனிடையே, அவ்வழியே சென்ற உணவு டெலிவரி செய்யும் நபர் ஒருவர் பெண் ஒருவர் சாக்கடையில் விழுந்து இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, அருகில் வசிப்பவர்கள் சாக்கடையில் இருந்து சந்தியாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்தியாவை பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது.

நான்கு மாத கர்ப்பிணிப் பெண் சாக்கடையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரிப்பட்டி பகுதியில் சாக்கடை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் சாக்கடை பணிகள் முடிந்த பிறகு சாக்கடைகள் முழுமையாக மூடப்படாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!