மகனின் படிப்புக்காக உயிரை விட்ட தாய்… ஓடும் பேருந்தில் விழுந்து தற்கொலை ; பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
18 July 2023, 11:17 am

குழந்தைகளை வாழ வைக்க ஓடும் பேருந்தில் விழுந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சேலம் முள்ளுவாடிகேட் மறைமலைஅடிகள் தெருவை சேர்ந்தவர் பாப்பாத்தி (46). இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். கணவரைப் பிரிந்து கடந்த 15 ஆண்டுகளாக தாய் இல்லத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரி படித்து வரும் மகளும், மகனும் உள்ளனர்.

கடந்த மாதம் 28ந் தேதி காலை 2வது அக்ரஹாரம் பகுதியில் தனியார் பஸ் மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார். இது குறித்து டவுன் காவல் ஆய்வாளர் மோகன்பாபு கண்ணா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, அவர் சம்பவம் நடப்பதற்கு முன்னதாக, டவுன் பகுதியில் இருந்து சென்ற பஸ்சில் விழுவதற்கு ஓடி சென்றபோது, மோட்டார்சைக்கிள் ஒன்று குறுக்கே வந்துள்ளது. அதில் மோதி பாப்பாத்தி கீழே விழுந்ததும், 2-வதாக வந்த பஸ்சிற்குள் ஓடிச்சென்று விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் காட்சியும் இடம் பெற்றிருந்தது.

விபத்து என்று முதலில் வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த விபத்திற்கு நான் காரணம் இல்லை என்று ஓட்டுநர் தெரிவித்த நிலையில், சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தபோது, பாப்பாத்தி தானாகவே பேருந்தின் முன்பு விழுந்து தற்கொலை செய்தது காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில், பாப்பாத்தியின் மகள் மற்றும் மகன் இருவரும் கல்லூரி பயின்று வருகின்றனர். கல்லூரி படிப்பிற்கான கட்டணத்தை இருவருக்கும் கட்ட முடியாத நிலை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வறுமையில் வாழ்ந்து வந்துள்ளதால் மனஅழுத்தத்தில் இருந்துள்ளார்.

அப்பொழுது விபத்தில் இறந்தால் நிவாரணத் தொகை கிடைக்கும் என்று யாரோ கூறியுள்ளனர். இதனால், பேருந்தில் விழுந்து உயிரிழந்தால் நிவாரணத் தொகை கிடைக்கும். அதில் குழந்தைகள் பிழைத்துக் கொள்வார்கள் என்று எண்ணத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 661

    0

    0