4வது கணவரைத் தேடிய பிரியா.. வசமாக சிக்கிய விவசாயி.. லட்சக்கணக்கில் மோசடி!
Author: Hariharasudhan11 December 2024, 1:30 pm
சேலத்தைச் சேர்ந்த பெண் மேட்ரிமோனியல் தளம் மூலம் கோவை விவசாயியிடம் இருந்து ரூ.7.12 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த 32 வயதான விவசாயி ஒருவர், திருமணத்துக்காக வரன்களைத் தேடி வந்துள்லார். அந்த வகையில், மேட்ரிமோனியல் செயலி ஒன்றிலும் தனது அனைத்து விவரங்களையும் திருமணத்துக்காக அவர் பதிவு செய்து உள்ளார்.
இந்த நிலையில், நாமக்கல்லைச் சேர்ந்த பிரியா என்ற பெண், கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மேட்ரிமோனியல் செயலி மூலம் அந்த விவசாயிக்கு அறிமுகமாகி உள்ளார். பின்னர், இருவரும் செல்போனில் பேசி தங்களுடைய குடும்பம் பற்றி விசாரித்துள்ளனர்.
பின்னர், இருவருக்கும் சம்மதம் ஆன நிலையில், அது திருமணப் பேச்சு வரை சென்று உள்ளது. இந்த நிலையில், ஒருமுறை பிரியா செல்போனில் பேசும்போது, தனது அக்காவுக்கு உடல் நலம் சரியில்லை என்றும், அவருடைய மருத்துவச் செலவுக்கு பணம் வேண்டும் என்றும் கெஞ்சிக் கேட்டு உள்ளார்.
இதனையடுத்து, தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் தானே கேட்கிறார், அவருக்கு கொடுக்கலாம் என்று நினைத்து விவசாயி, பிரியா கேட்கும் போதெல்லாம் பணத்தை வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்து வந்துள்ளார். இவ்வாறு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி வரை சுமார் 7 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை பிரியாவுக்கு அவர் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: சிம்பு உடன் நடிக்க முடியாம போச்சு.. ரொம்ப Depression ஆகிட்டேன் : பிரபல நடிகை வருத்தம்!
ஆனால், திருமணப் பேச்சை எடுக்கும் போதெல்லாம், பிரியா அதனை தட்டிக் கழித்து வந்து உள்ளார். இதனையடுத்து, விவசாயி உடன் பேசுவதை பிரியா நிறுத்தியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த விவசாயி, கோவையில் இருந்து பிரியா அளித்த நாமக்கல் முகவரிக்குச் சென்று பார்த்து உள்ளார்.
அப்போது, அப்படி ஒரு குடும்பமே அந்த முகவரியில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த விவசாயி, உடனடியாக இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து உள்ளார். இதனையடுத்து, இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்தவர் பிரியா என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சேலத்துக்கு விரைந்த போலீசார், பிரியாவைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பிரயாவுக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமானது தெரிய வந்தது.
அதிலும், பிரியாவின் முதல் கணவர் இறந்துவிட்ட நிலையில், இரண்டாம் கணவரிடமும் இருந்து பிரிந்த பிரியா, தற்போது சுதாகர் என்பவருடன் வாழ்ந்து வருவதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், மேட்ரிமோனியில் தனது விவரங்களைப் பதிவு செய்து, அதில் விருப்பம் தெரிவிக்கும் நபர்களை குறிவைத்து மோசடி செய்து வந்ததாக பிரியா வாக்குமூலம் அளித்து உள்ளார்.
இதனையடுத்து, பிரியாவைக் கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், பொள்ளாச்சியைச் சேர்ந்த விவசாயி மட்டுமல்லாது, வேறு யாரேனும் பிரியாவின் மேட்ரிமோனியல் வலையில் சிக்கி உள்ளனரா, எவ்வளவு பணம் மோசடியில் ஈடுபட்டு உள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.