சத்தியமங்கலத்தில் சம்பங்கி பூ விலை குறைவு : 10 டன் பூக்களை குளத்தில் கொட்டிய விவசாயிகள்!!
Author: Udayachandran RadhaKrishnan18 April 2022, 7:00 pm
ஈரோடு : சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் சம்மங்கி பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் சுமார் 10 டன் அளவுள்ள சம்மங்கி பூக்களை விவசாயிகள் சாலையோரம் கொட்டி செல்கின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ராஜன் நகர், சிக்கரசம்பாளையம், தாண்டாம்பாளையம். வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை, முல்லை, சம்பங்கி, செண்டு மல்லி, உள்ளிட்ட மலர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.
விவசாயிகள் சாகுபடி செய்துவரும் பூக்களை சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு விலை நிர்ணயம் செய்து ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப் பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் சம்பங்கி பூ ஒரு கிலோ 70 முதல் 80 வரை விற்பனையாகி வந்த நிலையில் சம்பங்கி பூக்களின் வரத்து அதிகரித்ததன் காரணமாக இன்று சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் சம்பங்கி பூ ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையானது.
மேலும் தனியார் நறுமண ஆலைகளும் பூக்களை கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த சுமார் 10 டன் அளவுள்ள சம்பங்கி பூக்களை விற்பனை செய்ய முடியாமல் சாலையோரம் கொட்டி செல்கின்றனர்.
சத்தியமங்கலம் பகுதியில் உள்ள மலர் விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி தங்களது நீண்ட நாள் கோரிக்கையான சத்தியமங்கலம் பகுதியில் நறுமண ஆலை அமைத்து விவசாயிகள் விளைவிக்கும் பூக்களை அரசு கொள்முதல் செய்து பூக்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.