வெளிமாநில லாரிகளில் வந்து ஆற்று மணல் திருட்டு… உஷாரான கள்ளக்குறிச்சி மக்கள்… நள்ளிரவில் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan25 August 2023, 1:48 pm
கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் ஆற்று மணல் எடுக்க வந்த வெளி மாநில லாரிகளை தடுத்து நிறுத்திய பொதுமக்களால் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது ஜம்பை கிராமம். இந்த கிராமத்தில் நேற்று இரவு கர்நாடகா பதிவெண் கொண்ட 5க்கும் மேற்பட்ட லாரிகள் தென்பெண்ணை ஆற்றில் மணல் ஏற்ற வந்துள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஜம்பை கிராம மக்கள் இரவு லாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, திருவண்ணாமலையில் அரசு சார்பில் வெட்டப்படும் குளத்திற்கு லாரிகளில் ஆற்றுமண் ஏற்றி செல்வதாக லாரியில் வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், அரசு வேலைக்கு மணல் எடுப்பது என்றால் பகலில் எடுக்க வேண்டியதுதானே? இரவில் எடுப்பதற்கான நோக்கம் என்ன? இரவில் எடுப்பதற்கு யாரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள், ஜேசிபி வாகனங்களை பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பரப்பி உள்ளனர். தற்போது, இந்த வீடியோ காட்சிகள் ரிஷிவந்தியம் பகுதியில் உள்ள சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
இதனை அடுத்து, அங்கு வந்த மணலூர் பேடை போலிசார் நள்ளிரவில் மணல் ஏற்றச் சென்ற லாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி பொது மக்களை சமாதானப்படுத்தினர். ஆனால், இதுவரை மணலூர்பேட்டை போலீசார் லாரிகளை பறிமுதல் செய்யாமல், அது குறித்து எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ காட்சிகள் அடிப்படையில் லாரி மற்றும் ஜேசிபி வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.