மணல் கடத்தலை தடுக்கச் சென்ற விஏஓவை லாரி ஏற்றி கொல்ல முயன்ற வழக்கு ; திமுக கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது..!!
Author: Babu Lakshmanan18 October 2023, 12:06 pm
பழனி அருகே ஆயக்குடி பகுதியில் அனுமதி இன்றி மண்ணள்ளியபோது தடுத்து நிறுத்திய விஏஓ மற்றும் உதவியாளர் மீது லாரி ஏற்றிக் கொல்ல முயன்ற புகாரில் திமுக கவுன்சிலர், திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்னிமலை சித்தன் கரடு பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு அனுமதியின்றி அள்ளி வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி, அவருடைய உதவியாளர் மகுடீஸ்வரன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.
அப்போது, அவர்கள் வேறு ஒரு இடத்திற்கான நடைசீட்டை பயன்படுத்தி மண் அள்ளப்பட்டது தெரியவந்ததை அடுத்து, லாரிகளை காவல் நிலையத்திற்கு எடுத்து வருமாறு கூறியுள்ளனர். லாரியை எடுத்துக்கொண்டு காவல் நிலையம் நோக்கி லாரிகள் முன்னால் செல்ல, பின்னால் விஏஓ மற்றும் அவரது உதவியாளர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, பொலிரோ ஜீப்பில் வந்த நான்கு பேர் விஏஓ மீது வாகனத்தை ஏற்றுவது போலவும், வலது புறமும் இடது புறமும் சினிமா காட்சிகள் போல் வாகனத்தை செலுத்தியதால் வாகனத்திற்கு வழி விடாமல் சென்றுள்ளனர். இதில் நிலை தடுமாறிய விஏஓ அச்சத்தில் ஆயக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மீதும், மண் அள்ளிய குண்டர்கள் லாரிகளை மோதுவது போல் சென்றுள்ளனர்.
மேலும், லாரிகளில் இருந்த மண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த விஏஓ மற்றும் உதவியாளர் மகுடீஸ்வரன் மீதும் கொட்டியவாறே சென்றுள்ளனர். இதனால் காவல் ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், தப்பி ஓடிய நான்கு பேரையும் மீதும் போலீசார் தேடி வந்தனர்.
மேலும், விஏஓ சங்கத்தினர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, விஏஓவை லாரி ஏற்ற முயன்றவர்களை 4 நாட்களாக போலீசார் தேடி வந்ததில், பாலசமுத்திரம் திமுக கவுன்சிலர் ரமேஷ், அவரது தந்தை சக்திவேல், திமுக கவுன்சிலரின் கணவர் பாஸ்கரன் மற்றும் காளிமுத்து உள்ளிட்டவர்களை போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.