தமிழகம் முழுவதும் சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி!
Author: Udayachandran RadhaKrishnan17 January 2025, 6:26 pm
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் சத்குரு குருகுலம் சமஸ்கிருதி மாணவர்கள் தேவார பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றனர். இதன் முதல் நிகழ்ச்சி பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களின் முன்னிலையில் துவங்கப்பட உள்ளது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (17/01/2025) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் திரு. பாலசுப்ரமணியன் அவர்கள் பேசுகையில் “சிவபெருமானின் அருமைகளையும், சிவநெறியின் பெருமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் இனிய பண்ணுடன் பக்தி ததும்ப பாடிய பாடல்கள் தேவாரம் என்று அழைக்கப்படுகிறது.
பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தேவாரம் எனும் அற்புத கொடையை நமக்கு அருளிச் சென்ற ‘தேவார நாயன்மார்களுக்கு’ நன்றியுணர்வை வெளிப்படுத்தவும், இன்றைய இளைஞர்கள் மத்தியில் தேவாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் சத்குருவின் வழிக்காட்டுதலில் சமஸ்கிருதி மாணவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 15-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்த இருக்கின்றனர்.
சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி பள்ளியை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் மொத்தம் 4 குழுக்களாக பிரிந்து சென்று இந்த தேவார பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
அந்த வகையில் பேரூர் ஆதீனத்தில் ஜன 17 ஆம் தேதி துவங்கும் இந்நிகழ்ச்சி ஜனவரி 18-ஆம் தேதி காமாட்சி புரம் ஆதீனம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.
அதே போல் ஜனவரி 19-ஆம் தேதி சிரவை ஆதீனம், மயிலை கபாலீஸ்வரர் கோவில், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், திருவானைக்கால் ஜம்புகேஸ்வரர் கோவில், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஜனவரி 20-ஆம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
சத்குரு தேவாரப் பாடல்களின் மகத்துவத்தை குறிப்பிட்டு பல்வேறு தருணங்களில் பேசியுள்ளார். பக்திப் பெருக்கை வெளிப்படுத்தும் தேவாரப் பாடல்களை மக்கள் அனைவரும் ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற மஹாசிவராத்திரி விழாவில் சம்ஸ்க்ருதி மாணவர்களால் பாரம்பரிய பண்ணுடன் பாடப்பட்ட தேவார இசைத்தட்டினை சத்குரு அறிமுகம் செய்தார்.
அப்போது சத்குரு தேவாரம் குறித்து பேசுகையில் “தமிழ் கலாச்சாரம் என்பது அடிப்படையாக பக்தியை மூலமாக வைத்து வளர்ந்த கலாச்சாரம். பக்தி என்றால் எல்லையில்லாத ஈடுபாடு. யார் ஒருவர் முழு பக்தியோடு ஏதோவொரு செயலில் ஈடுபடுகிறார்களோ, எந்த செயலாக இருந்தாலும் யார் முழுமையாக பக்தியோடு அவரின் செயலை செய்கிறார்களோ அவர்கள் எப்போதும் பரவசத்தில் இருப்பார்கள்.
இந்த தமிழ் கலாச்சாரத்தில் பல பக்தர்கள் இந்த பரவசத்திலேயே வாழ்ந்தார்கள். திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் இது போல பல மகான்கள் பக்தி பரவசத்தில் உருவாக்கிய கலாச்சாரம் இந்த தமிழ் மண்ணில் சேர்ந்திருக்கிறது. இந்த பக்தியின் வெளிப்பாடாக தமிழ் மண்ணில் தேவாரம் வெளிப்பட்டது. இதை அனைவரும் கேட்க வேண்டும்” என்று கூறி இருந்தார்.
நம் தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக தேவார திருமுறைகள் சிவ பக்தர்களாலும், ஓதுவார்களாலும் கோவில்கள் தோறும் பாடப்பட்டு வந்துள்ளது.
அந்த மரபின் தொடர்ச்சியாக சத்குரு குருகுலத்தின் ஒரு அங்கமான சம்ஸ்கிருதி பள்ளியில் மாணவர்களுக்கு சிறுவயது முதலே தேவாரப் பாடல்கள் பாரம்பரிய முறையில் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரி, நவராத்திரி, குரு பௌர்ணமி, தியானலிங்க பிரதிஷ்டை தினம் உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்பு தேவார பாடல்களை இந்த மாணவர்கள் பாடி வருவது குறிப்பிடத்தக்கது.