“மண் வளத்தை காப்பாற்றாமல் சுற்றுச்சூழலை காப்பாற்ற முடியாது” ; உலக நாடுகளின் பார்வையை மாற்றிய மண் காப்போம் இயக்கம்

Author: Babu Lakshmanan
12 December 2023, 8:17 am

“மண் காப்போம் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு தான் ‘மண் வளத்தை மீட்டெடுக்காமல், சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியாது’ என்பதை உலக நாடுகள் உணர தொடங்கி உள்ளன” என சத்குரு கூறியுள்ளார்.

மேலும்’ “பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை தடுக்க நாம் செலவு செய்யும் பணத்தில் பத்தில் ஒரு பங்கைக் கொண்டே நம்மால் நிலம் மற்றும் மண்ணின் சூழ்நிலையை குறிப்பிடத்தக்க விதத்தில் மாற்றமுடியும், இதன் மூலம் 8 முதல் 12 ஆண்டுகளில் 35 – 40% பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை நம்மால் குறைக்க முடியும். பருவநிலை பாதுகாப்பில் மண் ஒரு சூப்பர்ஸ்டாராக திகழ்கிறது” எனவும் சத்குரு தெரிவித்துள்ளார்.

துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச பருநிலை மாநாட்டில் கலந்து கொண்டுள்ள மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு இது தொடர்பாக பேசியுள்ள வீடியோவில், “துபாயில் நாங்கள் இருக்கிறோம். இங்கு COP 28 என்ற பெயரில் சர்வதேச பருவநிலை மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

2 ஆண்டுகளுக்கு முன்பு வரை சர்வதேச அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாநாடுகளில் மண் வளப் பாதுகாப்பு குறித்து ஒரு வார்த்தை கூட பேசப்படாமல் இருந்தது. நிலக்கரி மற்றும் எண்ணெய் பயன்பாடுகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்து மட்டுமே அதிகம் பேசப்பட்டு வந்தது. நம்முடைய தாய் மண் குறித்த கவனமே இல்லாமல் அந்த சுற்றுச்சூழல் மாநாடுகள் நடைபெற்றன.

ஆனால், நாம் ‘மண் காப்போம்’ என்ற இயக்கத்தை தொடங்கி பல்வேறு நாட்டு அரசுகளுடன் கலந்துரையாடிய பிறகு மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உலக நாடுகள் உணர தொடங்கி உள்ளன. சுற்றுச்சூழலை காப்பாற்ற வேண்டுமானால், மண்ணை முதலில் காப்பாற்ற வேண்டும் என்ற புரிதல் தற்போது உருவாகி உள்ளது. இது குறித்து பல நாடுகள் பேச ஆரம்பித்துள்ளன. குறிப்பாக, இந்த மாநாட்டை நடத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசாங்கம் ‘மண் வளத்தை காப்பதும் சுற்றுச்சூழலை காப்பதும் வேறு வேறு அல்ல; இரண்டுமே ஒன்று தான்’ என்பதை விரிவாக இந்த மாநாட்டில் பேசி உள்ளது. இது ஒரு மிகப் பெரிய முன்னேற்றம் ஆகும்.

ஏனென்றால், இவ்வளவு நாட்களாக மண் குறித்த கவனமே இல்லாமல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசி கொண்டே இருந்தோம். ஆனால், மண் காப்போம் இயக்கத்தின் தாக்கத்தால் மண்ணை காக்க வேண்டும் என்ற சூழல் உருவாகி உள்ளது. இதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி