’தமிழக அரசின் மீது ஊற்றப்பட்ட மலம்’.. சவுக்கு சங்கர் கடும் தாக்கு. சிபிசிஐடிக்கு கைமாறிய வழக்கு!
Author: Hariharasudhan25 March 2025, 8:54 am
என் வீட்டில் ஊற்றிய மலம், தமிழக அரசின் மீதும், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கின் மீதும் ஊற்றப்பட்ட மலம் என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரின் சென்னை வீட்டில் நேற்று காலை 50 பேர் கொண்ட கும்பல் திடீரென உள்ளே புகுந்து, வீட்டினுள் மலம் மற்றும் கழிவு நீரைக் கொட்டியதாக அவர் புகார் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தின்போது, வீட்டில் அவரது தாய் மட்டுமே இருந்ததாகவும் சவுக்கு சங்கர் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸின் கார்த்தி சிதம்பரம், நாதக சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சவுக்கு சங்கர் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே, தன் வீடு தாக்கப்பட்டது குறித்து சவுக்கு சங்கர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் துவங்கினர். இந்த நிலையில், ஏற்கனவே சென்னை மாநகர மற்றும் காவல் ஆணையர் குறித்து சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதால், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், நேற்று கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சவுக்கு சங்கர், “சவுக்கு மீடியா ஊடகத்தில் தொடர்ந்து சில ஆண்டுகளாக தமிழக அரசில் நடைபெற்று வரும் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் பதிவு செய்து வருகிறோம். தூய்மைத் தொழிலாளர்களுக்கு கழிவுநீர் வெளியேற்றும் வாகனம் வழங்குவதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.
தூய்மைத் தொழிலாளர்களுக்கு வாகனம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசே செயல்படித்தியிருக்க முடியும், ஆனால், அதை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தனர். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, 150 கோடி ரூபாய் வரை லாபமடைந்துள்ளார்.
இந்தத் திட்டத்தில் பயனடைந்தவர்களில் 130 பேர் காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்தவர்கள். மத்திய, மாநில அரசு சுத்திகரிப்புத் தொழிலாளர்களுக்கு வழங்கும் மானியத்தில் செல்வப்பெருந்தகை கொள்ளையடித்துள்ளார் என எனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தேன்.
போலீசார் நினைத்திருந்தால் என் வீட்டின் மீது நடந்த தாக்குதலை தடுத்திருக்க முடியும். காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை ஊர்வலமாக அழைத்துவந்து, என் வீட்டில் தாக்குதல் நடத்துகிறார். ஆனால், எதுவும் தெரியாமல் உளவுத்துறை இருக்கிறதா?
தாக்குதல் நடந்ததால் கீழ்பாக்கம் வீட்டின் உரிமையாளர் என்னை வீட்டைக் காலி செய்யும்படி கூறுகிறார். தாக்குதல் நடந்தபோது நான் வீட்டில் இருந்திருந்தால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். காவல் நிலையத்தில் எனது தாயார் புகார் அளித்துள்ளார். மலம் கலந்த கழிவுகளை சமையலறை, குளியலறை, படுக்கையறை, வளாகம் என அனைத்து இடங்களிலும் கொட்டியுள்ளனர்.
வாணிஸ்ரீ விஜயகுமார் என்ற காங்கிரஸ் கமிட்டியைச் சேர்ந்த வழக்கறிஞரின் தூண்டுதலில்தான் அவர்கள் வந்துள்ளார்கள். வந்தவர்கள் தூய்மைப் பணியாளர்களா என்ற சந்தேகம் எனக்கு உள்ளது. வந்தவர்கள் தூய்மைப் பணியாளர்களாக இருந்திருந்தால் எனது வீடியோவைப் பார்த்துவிட்டு சந்தோசம்தான் அடைந்திருப்பார்கள்.
இந்த வழக்கில் போலீசார் விசாரணைக்கு அழைத்தால், நான் நிச்சயமாக ஒத்துழைப்பு கொடுப்பேன். எனக்கு ஆதரவாக அறிக்கை கொடுத்த அனைத்து தலைவர்களுக்கும் நன்றி. எனது எதிர்கால நடவடிக்கை குறித்து இரண்டு நாட்களில் அறிக்கையாகப் பதிவு செய்ய உள்ளேன். இந்தச் சம்பவத்தில் எனது தாயார் மிகவும் வருத்தப்பட்டார்.
இதையும் படிங்க: ‘மதராஸி’ படத்தில் நடிக்க இருந்த பாலிவுட் நடிகர்..விலகியதற்கான காரணத்தை கூறிய ஏ.ஆர்.முருகதாஸ்.!
பின்வாசல் கதவில் எனது தாயார் இருந்திருந்தார் என்றால், நிச்சயம் அவரும் உயிரிழந்திருப்பார். என் வீட்டில் நடந்த தாக்குதலின் பின்புலத்தில் போலீஸ் உள்ளதாக நான் சந்தேகம் கொள்கிறேன். நான்காண்டு காலமாக திமுக ஆட்சி எப்படி நடக்கிறது என்று கூறினேனோ, அதற்கு என் வீட்டின் நடந்த சம்பவம் உண்மை என்பதை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.
இன்று என் வீட்டில் ஊற்றிய மலம், என் வீட்டில் ஊற்றப்பட்ட மலம் அல்ல, தமிழக அரசின் மீதும், தமிழக அரசின் சட்டம் ஒழுங்கின் மீதும் ஊற்றப்பட்ட மலம். தமிழக அரசு ஆட்சி நடத்தும் லட்சணத்தின் மீது ஊற்றப்பட்ட மலம்” எனத் தெரிவித்தார்.
