தென்மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை.. வானிலை மையம் முக்கிய எச்சரிக்கை
Author: Hariharasudhan20 November 2024, 9:39 am
விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
கோயம்புத்தூர்: வங்கக் கடலில் வருகிற 23ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 23 அன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும், இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய தென்மாவட்ட பகுதிகள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று (நவ.19) இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி, தென்காசி, திருநெல்வேலி, திருவாரூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (நவ.20) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர். அதேநேரம், இந்த மாவட்டங்களில் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார். அதேநேரம், விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான முதல் கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
அதேபோல், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும், ராமநாதபுரம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.