திமுக அமைச்சர் திறந்து வைத்த பள்ளி கட்டிடம் : கல்வெட்டில் காணாமல் போன காங்., எம்எல்ஏ பெயர்… நிர்வாகிகள் கொந்தளிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan11 November 2022, 7:07 pm
திமுக அமைச்சர் திறந்து வைத்த பள்ளி கட்டிட கல்வெட்டில், விருத்தாச்சலம் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பெயர் இல்லாததால், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர்.
கூட்டணி தர்மத்தை மதிக்காதது, வெட்கக்கேடு என காங்கிரஸ் நிர்வாகிகள், திமுகவிற்கு எதிராக, சமூக வலைதளத்தில் கடும் கண்டனத்தை, பதிவு செய்து வருவதால் பரபரப்பு.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த ஆலடி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், சுமார் 17 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் திறப்பதற்காக திமுக அமைச்சர் கணேசனும், விருத்தாசலம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனும் வருகை தந்தனர்.
பள்ளி கட்டிடத்தை திறந்த பின்பு, கட்டிடத்தில் பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டில், திமுக அமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள் பெயர் மட்டும் இருந்ததால், காங்கிரஸ் கட்சியினர் கடும் கொந்தளிப்பு அடைந்தனர்.
விருத்தாச்சலம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் பெயர் இல்லாதது ஏன்? என்று, திமுக அமைச்சர் காரில் செல்ல முயன்ற போது, காங்கிரஸ் நிர்வாகிகள் கூச்சலிட்டு, கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் திமுக அமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள் விருதாச்சலம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனை புறக்கணிப்பு செய்வதாக குற்றச்சாட்டினர். அதனைத் தொடர்ந்து விருத்தாச்சலம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் பெயர் இல்லாததை கண்டித்து, விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகி ஜெய குரு என்பவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் காவல் துறையினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதன் பேரில் போராட்டத்தை கைவிட்டார்.
அது மட்டும் இல்லாமல், திமுகவினர் அவசர அவசரமாக திமுக அமைச்சரை வரவழைத்து, நிகழ்ச்சி நடத்தியதாகவும், சம்பந்தப்பட்ட ஆலடி ஊராட்சியின் பஞ்சாயத்து தலைவியான பியூலாவுக்கும், அழைப்பு விடுக்காமல், திமுக அமைச்சர் பள்ளி கட்டடத்தை திறந்து உள்ளதாக, ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் விஜயகுமார் குமறும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதால், பல்வேறு ஊராட்சி மன்ற தலைவர்களும், கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
பள்ளி கட்டிட கல்வெட்டில் பெயர் இல்லாதது, ஊராட்சி மன்ற தலைவருக்கு அழைப்பு விடுக்காதது உள்ளிட்ட பிரச்சனைகள், கடும் சர்ச்சைக்கு உள்ளானதால், திமுகவிற்கு எதிராக சமூக வலைதளத்தில் காங்கிரஸ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு, கண்டனத்தை பதிவு செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.