கோவையில் பள்ளி மேலாண்மைக்குழு பெற்றோர்கள் விழிப்புணர்வு கூட்டம்: கோரிக்கைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் சமீரன்..!!
Author: Rajesh20 March 2022, 4:39 pm
பள்ளி மேலாண்மைக்குழு பெற்றோர்கள் விழிப்புணர்வு கூட்டத்தில் பெற்றோர்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். இன்று பள்ளி மேலாண்மை குழு பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தில் 1203 அரசு பள்ளிகளில் இக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதில் ஒரு பகுதியாக சீரநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் கலந்து கொண்டார். அவரிடம் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி குறித்தும் தேவைகள், மாணவர்களிம் தேவைகள் குறித்தான பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
பெரும்பாலானோர் பள்ளி ஸ்மார்ட் கிளாஸ் வசதி, கழிவறை வசதி, விளையாட்டு, திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம், ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர். சிலர் அரசு பள்ளி சிறப்பாக செயல்படுவதாகவும் ஆசிரியர்கள் அனைவரும் சிறந்த முறையில் மாணவர்களுக்கு பாடம் கற்று கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.
பின்னர் பெற்றோர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் அந்தந்த துறைகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும் அரசு பள்ளி மாணவர்களே சமூகத்துடன் இணைந்து வாழ கற்று கொள்வதாகவும் அரசு பள்ளி மாணவர்களே பல்வேறு துறைகளில் சாதித்து காட்டுவதாகவும் தெரிவித்தார்.
அதனை தொடந்து பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் மாணவர்கள் புகார் பெட்டியையும் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.