ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பள்ளியில் கொடுக்கப்பட்ட மாத்திரை… 10 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ; கரூரில் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan14 February 2023, 5:46 pm
கரூரில் பள்ளியில் கொடுக்கப்பட்ட மாத்திரையை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 10 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த 6ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் குடல்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது.
அதனை சாப்பிட்ட ஒரு மாணவன் வாந்தி எடுத்துள்ளான். அதனை பார்த்த மற்ற மாணவ, மாணவிகளும் வாந்தி எடுத்ததுடன், மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பள்ளியின் ஆசிரியர்கள் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் இயல்பு நிலையில் உள்ளனர்.
இருந்த போதிலும், அவர்களை சிறிது நேரம் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வைத்து அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவ, மாணவிகளின் வாந்தி, மயக்கத்திற்கான காரணம் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.