பணியிட மாறுதல் பெற்ற ஆசிரியர்கள்… கட்டியணைத்து கண்ணீர் விட்டு அழுத மாணவிகள்… நெகிழ்ச்சி சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
17 March 2022, 12:38 pm

வேலூர் : 5 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பள்ளி மாணவர்கள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் காண்போர் மனதை நெகிழச் செய்தது

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு புனிதா, கார்த்திகேயன், ஜெயந்தி, தனலஷ்மி, சுகந்தி, ஆகிய ஆசிரியர்கள் துறை சார்ந்த பாடம் நடத்தி வருகின்றனர். இவர்களில் கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக புனிதா மற்றும் கார்த்திகேயனும், மற்றவர்கள் 10 வருடத்திற்கு மேலாக அந்தப் பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கார்த்திகேயன் என்ற ஆசிரியர் பெண்ணாத்தூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், தனலட்சுமி என்ற ஆசிரியர் வேலப்பாடி மேல்நிலைப்பள்ளிக்கும், புனிதா என்ற ஆசிரியர் காங்கேயநல்லூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், ஜெயந்தி என்ற ஆசிரியர் லத்தேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும், சுகந்தி என்ற ஆசிரியர் ஆற்காடு தோப்புக்காடு உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறையிலிருந்து நேற்றுமுன்தினம் பணியிட மாற்றத்திற்கான உத்தரவு வந்துள்ளது.

இதனையடுத்து நேற்று நண்பகல் மதியம் ஒரு மணி அளவில் இவர்கள் பள்ளியை விட்டு சென்றுள்ளனர். அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள தலைமை ஆசிரியர் அறையில் இருந்து வெளியே வரும்போது, ஆசிரியர்களிடம் படித்த மாணவிகள், ஆசிரியர்கள் வெளியே செல்லாதவாறு மடக்கிப் பிடித்து, கட்டி அழுது புரண்டு தங்களின் சோகத்தை வெளிபடுத்தியுள்ளனர். மேலும் அவர்களை தங்கள் பள்ளியிலேயே இருக்குமாறும் கூறி அழுதுள்ளனர்.

இதனையடுத்து, ஆசிரியர்கள் மாணவிகளை நன்றாக படிக்க வேண்டும் என்றும், வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்றும் அறிவுரை கூறி, அவர்களும் அழுதுகொண்டே விடைபெற்றனர். மேலும் இவர்களுக்கு சக ஆசிரியர்கள் ஊழியர்கள் அலுவலர்கள் விடை கொடுத்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1343

    0

    0