தென்பெண்ணை ஆற்றில் குளித்த போது பாறை சரிந்து பள்ளி மாணவன் பலி : விழுப்புரம் அருகே சோகம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2022, 8:13 pm

விழுப்புரம் : தென்பெண்ணை ஆற்றில் குளித்தபோது கருங்கற்கள் சரிந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே தளவானூர் காலனி பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் ராமகிருஷ்ணன் (வயது 13). இவன் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

மாணவன் ராமகிருஷ்ணன் பள்ளி முடிந்து மாலை 4.30 மணியளவில் அங்குள்ள தென்பெண்ணை ஆற்று பகுதிக்குச் சென்றான். அங்குள்ள அணைக்கட்டில் மண் அரிப்பை தடுப்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கருங்கற்களில் ஏறி நின்றபடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராதவிதமாக கருங்கற்கள் சரிந்து விழுந்ததில் ராமகிருஷ்ணன் அங்குள்ள குட்டை பகுதியில் தேங்கியிருந்த தண்ணீரில் தவறி விழுந்தான். அவன்மீது கருங்கற்களும் சரிந்து விழுந்ததால் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டான்.

உடனே அருகில் இருந்த இளைஞர்கள் அங்கு விரைந்து சென்று ராமகிருஷ்ணனை மீட்க முடியாததால் இதுகுறித்த தகவல் அறிந்து விழுப்புரம் தாலுகா போலீசார் மற்றும் விழுப்புரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் அங்கு விரைந்து வந்து மாணவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ராமகிருஷ்ணனை பிணமாக மீட்டனர். அதன் பிறகு அவனது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்த காண்போரின் கல்நெஞ்சையும் உருக வைப்பதாக இருந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Second Wife Mounika talk About Balu Mahendra அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!