நாளை மறுநாள் முதல் பள்ளிகள் திறப்பு… தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…!!
Author: Babu Lakshmanan11 June 2022, 11:50 am
சென்னை : தமிழகத்தில் ஜுன் 13ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டுதேர்வும், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் நடந்து முடிந்து விட்டது. 1 முதல் 9 வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டு விட்டது. அதேவேளையில், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிகிறது.
இதனிடையே, 2022-23ம் கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் வெளியிட்டார். அதாவது, தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும், 12-ம் வகுப்பிற்கு ஜூன் 20-ம் தேதியும், 11-ம் வகுப்பிற்கு ஜூன் 27-ம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்று கூறினார்.
இதனிடையே, நாளை மறுநாள் முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதால், அதற்கான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதாவது, பள்ளி பேருந்து பரிசோதிக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்த பிறகே பேருந்துகளை இயக்க வேண்டும்.
பள்ளிகளில் மின் இணைப்புகளில் மின்கசிவு, கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா..? என்பதை ஆய்வு செய்து சரி செய்ய வேண்டும்.
சத்துணவு கூடங்களை தூய்மைப்படுத்தி மாணவர்களுக்கு சுகாதாரமான உணவு வழங்குவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாடநூல்கள் பள்ளியில் பெறப்பட்டதை உறுதி செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0
0