திமுக கவுன்சிலருக்கு அரிவாள் வெட்டு : நகராட்சி கூட்டத்தில் வந்த போது பட்டப்பகலில் மர்மகும்பல் துணிகரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 November 2022, 10:00 pm

நகராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் என்பவரை மர்ம நபர்கள் வெட்டியதில் பலத்த காயமடைந்த சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேட்டூர் அடுத்த குள்ள வீரன் பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (55). இவர் 14- வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளர். இந்நிலையில் இன்று மேட்டூர் நகராட்சியில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனக்கு சொந்தமான காரில் வந்து இறங்கினார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் வெங்கடாசலத்தை அறிவாளால் சரமாரியாக வெட்டியது. அங்கிருந்து தப்பி ஓடிய வெங்கடாஜலம் நகராட்சி அலுவலகத்தில் புகுந்து கதவை தாழிட்டு கொண்டார்.

அருகில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டதை அடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். சம்பவ இடத்திற்கு மேட்டூர் டி.எஸ்.பி, சண்முகம் தலைமையில் சென்ற போலீசார் படுகாயம் அடைந்த வெங்கடாஜலத்தை மீட்டு முதல் உதவி சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் சேலம் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் உயர் சிகிச்சைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு அதிமுக முன்னாள் நகர செயலாளர் பழனிசாமி மற்றும் அவரது மைத்துனர் மாதேஷ் ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் வெங்கடாசலம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு நீதிமன்றம் சென்று விடுதலை ஆனார். மேலும் இவர் மீது மேட்டூர் காவல் நிலையத்தில் அடிதடி ,ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதனால் முன் விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 707

    0

    0