பாஜகவை வீழ்த்த அதிமுக எனும் ஆயுதம் மிக முக்கியம்… இந்த ஒரு விஷயம் இருந்தால் கூட்டணிக்கு தயார்… கண்டிஷன் போட்ட நெல்லை முபாரக்!!
Author: Babu Lakshmanan5 ஜனவரி 2024, 5:09 மணி
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த அதிமுக எனும் ஆயுதம் மிக முக்கியமானது என்று மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :- மதுரையில் ஜனவரி 7ஆம் தேதி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு நடைபெறவுள்ளது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் மதுரையில் ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை பாதுகாப்பு’ மாநாடாக நடைபெற உள்ளது. மாநாட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் அகில இந்திய தலைவர் பைசி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.
மேலும், மாநாட்டில் மும்மதத்தை சார்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாடு அரசு போக்குவத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளனர். போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பொங்கல் பண்டிகையை ஒட்டி போராட்டத்தை அறிவித்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவர்கள். தமிழ்நாடு அரசு போக்குவத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும்.
சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சென்று வருவதற்கு பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஓராண்டுக்குள் மூடப்பட போவதாக செய்திகள் வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போலவே கோயம்பேடு பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஒரே மாதிரியாக 6,000 ரூபாய் நிவாரண தொகை வழங்க வேண்டும். பாஜகவுடன் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதால் எஸ்டிபிஐ மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்துள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு நிறைய காலங்கள் உள்ளதால் கூட்டணி குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. அமமுக உடன் இரண்டு முறை தேர்தல் கூட்டணி வைத்தோம். அந்தந்த தேர்தலோடு கூட்டணி முடிவு பெற்றது.
சிறுபான்மையினரை எதிரியாக பாவித்து தனிமைப்படுத்த கூடிய காலமாக உருவெடுத்து வருகிறது. மதச்சார்பின்மையை பேசக்கூட அச்சப்பட வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். எஸ்டிபிஐ கட்சி மதச்சார்பன்மையை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகள் அமைப்புகளையும் ஆதரிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த அதிமுக எனும் ஆயுதம் மிக முக்கியமானது, நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பின்மை தேர்தல் வாக்குறுதியாகவே மாற வேண்டும்,” என கூறினார்,
0
0