தீபாவளிக்காக ரகசிய வசூல் வேட்டை.. தனி அறை அமைத்து ரூ.9 லட்சம் பணம் பதுக்கல் : சிக்கிய அரசு அதிகாரி!!
Author: Udayachandran RadhaKrishnan10 November 2023, 7:40 pm
தீபாவளிக்காக ரகசிய வசூல் வேட்டை.. தனி அறை அமைத்து ரூ.9 லட்சம் பணம் பதுக்கல் : சிக்கிய அரசு அதிகாரி!!
திருச்சி மாவட்ட வேளாண் விற்பனை குழு அலுவலகம் திருச்சி மதுரை மெயின் ரோட்டில் தலைமை இடம் கொண்டு செயல்படுகிறது.
இதன் செயலாளராக சுரேஷ் பாபு பதவி வகித்து வருகிறார். மேலும், திருப்பூர் மாவட்டத்திற்கும் முதல்நிலை செயலாளராக கூடுதல் பொறுப்பு வகித்தும் வருகிறார்.
திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 14ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 15 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் இவருடைய கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு திருச்சி, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள விற்பனையாளர்களிடம் இருந்து சுரேஷ்பாபு தீபாவளி வசூல் செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி ரகசிய தகவலின் பேரில், திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் துணை வட்டாட்சியர் பிரேம்குமார், மற்றும் குழுவினருடன் திருச்சி மதுரை சாலையில் உள்ள திருச்சி விற்பனை குழு அலுவலகத்தில் மதியம் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சுரேஷ் பாபு இடமிருந்து கணக்கில் வராத 90ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும், அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் சுரேஷ்பாபு விற்பனையாளர்களிடமிருந்து வசூல் செய்த பணத்தை கிராப்பட்டியில் தங்கி உள்ள அறையில் வைத்திருப்பதாக அளித்த தகவலின் பேரில் அறையை சோதனை செய்த போது அங்கும் கணக்கில் வராத 8 லட்சத்து 80ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
மொத்தம் அவரிடமிருந்து 9லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் அவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.