இல்லம் தேடி கல்வி அல்ல… இல்லம் தேடி சாராயம் : திமுக அரசை கடுமையாக விமர்சித்த எவிடென்ஸ் கதிர்!
Author: Udayachandran RadhaKrishnan27 June 2024, 2:45 pm
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக நேரடி கள ஆய்வு மேற்கொண்ட எவிடன்ஸ் அமைப்பின் இயக்குனர் கதிர் இன்று நரிமேடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் கள ஆய்வு அறிக்கை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்துபேசினார்.
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணம் 64பேர் உயிரிழந்துள்ளனர் இறப்பு விகிதம் உயரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் இதுவரை 211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு மரக்காணத்தில் 22 பேர் உயிரிழந்த போது நேரடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று இனி ஒரு சொட்டு கள்ள சாராய விற்பனை நடக்காது என கூறினார். ஆனால் இப்போது கள்ளச்சாராய விற்பனை பல மடங்கு. உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், மாதர்சேரி ஆகிய பகுதிகளில் நேரடி கள ஆய்வு மேற்கொண்டோம்
கருணாபுரத்தில் காவல்நிலையம், கோர்ட், கலெக்டர் ஆபிஸ் அருகே விஷ சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் அரசு நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளது. இந்த விஷ சாராய மரணங்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும், எனவும், மருத்துவமனையில் RED ZONE மற்றும் DARK ZONE வார்டுகளில் அதிக பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விஷ சாராய விவகாரத்தில் உயிரிழப்புகள் அதிகரிப்பை தாமதமாக அறிவிக்க மக்களை திசை திருப்புகின்றனர், தமிழகத்தில் 45ஆயிரத்தில் 862 கோடிக்கு டாஸ்மாக் வியாபாரம் நடைபெற்றுள்ளது.
54 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கோண்டோம் – இதில் பட்டியலினத்தவர்கள் தான் அதிகம் இறந்துள்ளனர். இறந்தவர்களின் பெண்களும் குறைந்த வயதுடையவர்களாக உள்ளனர். உயிரிழந்துவிடுவார்கள் என்ற நிலைமையில் உள்ள DARK RED ZONE ல் – அதிகளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விஷ சாராயத்தில் உயிரிழந்தவர்களில் 28 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவித்துவருகின்றனர். இதில் 11. பெண் குழந்தைகள் உள்ளனர். கள்ளக்குறிச்சியில் மொத்த வியாபாரியிடம் இருந்து சில்லறை வியாபாரிகளுக்கு கள்ள சாராயம் விற்பனை செய்யப்பட்டுவருகின்றது. ஒரு பாக்கெட் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் மாலை 4 முதல் 7 மணி வரை விற்பனை நடைபெற்றுள்ளது. நாள்தோறும் காவல்துறையினர் தூரமாக நின்று லஞ்சம் வாங்கி சென்றுவந்துள்ளனர். 18ஆம் தேதியே கள்ளசாராயம் அருந்தி இருவர் இறந்துள்ளனர். ஆனால் அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் கள்ளச்சாராய மரணம் இல்லை என்றார்
தலித் மக்கள் அதிகமாக இருக்ககூடிய பகுதிகளை குறிவைத்து கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது., சிறுவர்களும் கள்ளச்சாராயம் குடித்துவருகின்றனர். 18ஆம் தேதியே விஷ சாராயம் அருந்திய இளைஞர் ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது சிகிச்சை அளிக்க முடியாது என கூறி அனுப்பியுள்ளனர்
கள்ளக்குறிச்சியில் மாதவசேரியில் கோவிலில் வைத்து பூசாரி கள்ளச்சாராயத்தை விற்றுள்ளனர், இல்லம் தேடி கல்வி என்பதை மறந்து இல்லம் தேடி சாராயம் என்பது போல் மாறிவிட்டது தமிழ்நாடு
உளவுத்துறைக்கு கள்ள சாராய விற்பனை குறித்து தெரியாதா? கள்ளச்சாராயம் விற்பனை குறித்து புகார் அளித்தால் புகார்தாரரை வீடு்தேடிவந்து புகார் மனுவை காண்பித்து மிரட்டிசெல்லும் வகையில் முதலமைச்சரின் கீழுள்ள காவல்துறை செயல்பட்டுவருகின்றது
தமிழக அரசு கள்ள சாராய மரணத்தில் தோற்றுபோய்விட்டது அரசின் இயலாமை, மரணத்திற்கு பொறுப்பு என்பதற்காக்தான் 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுதொகை அளித்துள்ளனர்
கள்ளச்சாராய மரண விவகாரத்தில் SC ST வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட முடியாது என SC ST மாநில ஆணையம் தெரிவிக்கின்றது. ஏற்கனவே குண்டாசில் இருந்த கோவிந்தராஜ் என்ற நபர் மூலமாக தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுவந்துள்ளது
தற்போது பல ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் கண்டறியப்படுகிறது. முதலமைச்சர் ஒரு சொட்டு விற்பனை ஆகாது என கூறிய நிலையில் எப்படி விற்பனை நடந்தது, எவிடென்ஸ் அமைப்பு கள ஆய்வுக்கு சென்றபோது மருத்துவமனைக்குள் ICU வார்டுக்குள் அனுமதிக்கவில்லை , மரண விவரத்தை முழுமையாக தெரிந்துவிடும் என்பதால் அனுமதிக்கவில்லை, ஊடகத்தினரையும் மருத்துவமனைக்குள் அனுமதிப்பதில்லை, எங்கள் குழுவை காவல்துறையினர் பின் தொடர்ந்து வருகின்றனர்
எங்களை ஆய்வுக்கு செல்ல விடாமல் தடுக்க வேண்டும் என 2 MLA, ஒரு அமைச்சர் மூலமாக உத்தரவு வந்துள்ளதாக தகவல் வந்தது, கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரண விவகாரத்தில் உச்சநீதிமன்ற தானாக முன்வந்து ஒரு விசாரணை குழு உருவாக்கி விசாரணை நடத்த வேண்டும் அப்போது தான் உண்மை வெளிவரும், சிபிசிஐடி விசாரணை வெளிப்படையாக இருக்காது, காவல்துறையை காட்டிக்கொடுக்க மாட்டார்கள், சிபிஐ விசாரணையும் நம்ப முடியாது, ஆதி திராவிட மக்களுக்கான ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை விட 10 மடங்கு மதுபான விற்பனை அதிகமாக உள்ளது. கள்ளச்சாராயம் விவகாரத்தில் இறந்தவர்களுக்கு 25 லட்சம் வழங்க வேண்டும், உயிரிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை ஏன் துறைக்கு சம்மந்தம் இல்லாத அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்
உயிரிழந்தவர்களின் குழந்தைகைகளின் கல்வி உதவித்தொகை 10ஆயிரம் வழங்க வேண்டும், ஒவ்வொரு ஊராட்சியில் கள்ளச்சாராயம் விற்பனை தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும், விஷ சாராய உயிரிழப்பு விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளையும், சங்கிலி தொடர் குற்றவாளிகளையும் கண்டறிய வேண்டும் என்றார்
கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக கலந்தாய்வு கூட்டம், கருத்துகேட்பு கூட்டம், நடத்த வேண்டும் , மதுரை மாவட்டத்தில் மூலைக்கு மூலை கஞ்சா விற்பனை நடைபெறுகிறது. ஆப்ரேசன் கஞ்சா என்பது ஏன் கொண்டுவரப்பட்டது. மதுவிற்பனை கள்ள சாராய விற்பனை போதைப்பொருள் விற்பனை குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்
மருத்துவமனை போல மூன்று கட்டங்களாக பிரித்து போதைப்பொருள் விற்பனைகளை கட்டுப்படுத்த வேண்டும், கள்ளச்சாராயம் விற்பனை குறித்து முழுமையாக ஆய்வுசெய்து வெள்ளை அறிக்கை தயாரித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்
கள்ளச்சாராய விவகாரத்தில் 2 MLA க்கள் குறித்து ஏன் ? சொல்கிறீர்கள் என கேட்டால் அவர்களுக்கு தெரியும் என கள ஆய்வின்போது பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள் ,
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஒரு நபர் கமிசன் , சிபிசிஐடி விசாரணை, இழப்பீடு தொகை என கூறி ஏமாற்றிவிடுவார்கள்
அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த மரணம் நடந்துள்ளது. இதனை மனித உரிமை ஆணையம் நிச்சயமாக நேரில் விசாரணை நடத்த வேண்டும், தமிழகத்தின் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் முழுமையாக இல்லவே இல்லை என்ற நிலை தான் உள்ளது, தமிழகத்தில் ஆணவப்படுகொலை சட்டம் தேவையில்லை என்றார் ஆனால் மதுரையில் பட்டியலின பிரிவுகள் இடையே ஒரு இளைஞர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்
எதிர்கட்சியாக இருக்கும் போது ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்படும் என்றார் ஆனால் இப்போது வேண்டாம் என்கிறார். கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ஏன் முதலமைச்சர் சந்திக்கவில்லை, அரசியலுக்காக டெல்லி செல்லும் முதலமைச்சர் சொந்த மாநில மக்களை சந்திக்காததது ஏன்?
மத்திய அரசை சார்ந்தவர்களும் ஏன்? கள்ளக்குறிச்சி செல்லவில்லை, கள்ளச்சாராயம் மரண விவகாரத்தில் அதிகாரிகளின் முழுமையான தோல்வியை முதலமைச்சர் ஒத்துக்கொள்ள மாட்டாரா?
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மனித உரிமை ஆணையமும், குழந்தைகள் நல ஆணையமும் நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் , கள்ளச்சாராயம் விற்பனையின் போதும் சாதிய கட்டுப்பாடோடு விற்பனை நடைபெற்றுள்ளது.
அந்த்தந்த சாதிகளை சேர்ந்த வியாபாரிகளிடம் அந்தந்த சாதி மக்கள் வாங்கி குடித்துள்ளனர், திமுக ஆட்சியில் வீட்டிற்கே தேடிவந்து கள்ளச்சாரயம் விற்பனை நடைபெறுவதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.