’சங்கினா நண்பன்.. திராவிடன்னா திருடன்..” மீண்டும் சீமான் பரபரப்பு பேச்சு!
Author: Hariharasudhan3 December 2024, 3:02 pm
சங்கி என்றால் நண்பன், திராவிடன் என்றால் திருடன் என்றும் பொருள் உண்டு என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், சங்கி தொடர்பான விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான், “என்னை தனிப்பட்ட முறையில் சங்கி எனக் கூறியதற்கு தான் செருப்பைக் கழட்டி அடிப்பேன் எனக் கூறினேன்.
சங்கி என்றால் நண்பன் என புராண காலங்களிலேயே விரிவாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாணயம் வெளியிடுவதற்கு மத்திய அரசின் அமைச்சர்களை அழைத்து வருகிறீர்கள் (திமுக), இங்கு இருந்து டெல்லி சென்று மத்திய அரசின் தலைவர்களைப் பார்த்து சந்தித்துப் பேசுகிறீர்கள், அப்படியென்றால் திமுகவைச் சார்ந்தவர்கள் எல்லாம் சங்கி இல்லையா?.
சங்கி என்றால் நண்பன், திராவிடன் என்றால் திருடன் என்று பொருள். நீங்கள் தமிழ் மக்களை, தமிழ் இனத்தை மறைத்து திராவிடன், திராவிடன் எனக் கூறி வருகிறீர்கள். ‘எனது தந்தையை சங்கி எனக் கூறுவது வருத்தம் அளிக்கிறது’ என ரஜினியின் மகள் கூறினார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் ஏற்கனவே ஆதரவாகப் பேசினேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அது கடன் தான்.. ஆளும் தரப்புக்கு திருமா மறைமுக அழுத்தம்? அப்போ இபிஎஸ் சொன்னது?
இதனையடுத்து, “அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக ஆட்சியில் இருக்கும் போது என்னையும் அழைத்தார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் சமத்துவம், சமூகநீதி என்பவை எல்லாம் வெட்டிப் பேச்சு. உங்கள் அரசியலமைப்புக் கோட்பாட்டில் இஸ்லாமியர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு என தனி இட ஒதுக்கீடு இருக்கிறதா? இல்லையா? அப்படி இருக்கும்பொழுது, அது எப்படி மதச்சார்பற்ற அரசாக இருக்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய சீமான், “எச்.ராஜா அவதூறு பேசிவிட்டார் எனக் கூறுவதை முதலில் விடுங்கள். அதைவிட அதிகமாகவே சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது? அல்லது அவற்றைப் பற்றி அரசுக்குத் தெரியாதா?” என்றும் கேள்விகளை நாதக ஒருங்கிணைப்பாளர் முன்வைத்தார்.