விஜய் அப்படிச் சொன்னது தப்பு.. மீண்டும் தலைகீழான சீமான்!
Author: Hariharasudhan19 December 2024, 2:31 pm
மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அவர்களுக்கு உதவுவது என்பது சடங்கு என விஜய் கூறுவது தவறான விஷயம் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
திருச்சி: கடந்த 2018ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில், நாம் தமிழர் கட்சியினரும், மதிமுகவினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். பின்னர், இது தொடர்பாக விமான நிலைய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 19 பேர், இன்று (டிச.19) திருச்சி கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு ஆஜராகினர். பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது அவர்களுக்கு உதவுவது என்பது சடங்கு என விஜய் கூறுவது தவறான விஷயம். அது கடமை, அது சமூக பொறுப்பு தான். ஒரே நாடு ஒரே தேர்தலை ஏற்பது என்பது போல், ஒரு துரோகம் இருக்காது. தமிழ்நாடு அரசிடம் இருந்து, அதிகாரத்தை ஆளுநர் எடுத்துக்கொள்ள நினைக்கிறார்.

இது மக்களாட்சி. மக்கள் பிரச்னையை திசைத் திருப்பவே அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசி இருக்கிறார். உயிருடன் இருப்பவர்களுக்கு சாப்பாடு போடாத கடவுள், இறந்த பின் சொர்க்கம் தருவார் என்றால் அதை நாம் எப்படி நம்புவது? அயோத்தியில் கடவுள் பெயரைக் கூறி தான் போட்டியிட்டீர்கள், ஆனால் அம்பேத்கர் பெயரைக் கூறியவர் தான் அங்கு வெற்றி பெற்றிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சலூன் கடை ஊழியர் மீது விசிக நிர்வாகி கொலைவெறி தாக்குதல்.. வெளியான சிசிடிவி காட்சிகள்!
முன்னதாக, தவெக தலைவர் விஜய், தனி விமானத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்காகச் சென்ற வீடியோ வைரலான நிலையில், இது குறித்து சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. உடனடியாக கோபமான சீமான், இது வேண்டாம், வேறு கேளுங்கள் என்றார்.