விஜய்க்கு நேரடி அழைப்பு விடுத்த காங்கிரஸ்.. என்ன செய்யப் போகிறது தவெக?
Author: Hariharasudhan18 January 2025, 1:52 pm
இந்துத்துவா சக்திகளை ஒழிக்க விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி கே. ராமமூர்த்தி பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் விஜய் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, “விஜய் அவருடைய மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவோம் எனக் கூறினார். எதனை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஒழித்துவிடலாம், ஓரங்கட்டி விடலாம்.
ஆனால் இந்துத்துவா சக்திகளை, மதவாத சக்திகளை ஓரங்கட்ட வேண்டும் என விஜய் I.N.D.I.A கூட்டணிக்கு வருவதே அவருக்கும் நல்லது, அவருடைய இயக்கத்துக்கும் நல்லது. இதை நான் இந்த நாட்டின் குடிமகனாகச் சொல்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாநகரின் மையப்பகுதியில் இளைஞருக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு.. திருச்சியில் பயங்கரம்!
முன்னதாக, திமுக தனது அரசியல் எதிரி, பாஜக தனது கொள்கை எதிரி எனக் கூறிக்கொண்டே அரசியலுக்குள் நுழைந்துள்ள விஜய்க்கு, அவ்வப்போது இந்தியா கூட்டணி கட்சியினர் தோள் தட்டுவதும் நடந்து வருவதும், தற்போது நேரடியாகவே விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.