திமுகவிடம் அடகு வைக்கப்பட்ட காங்கிரஸ்.. மூத்த தலைவர்களை விமர்சித்தால்.. தீவிரமடையும் உட்கட்சி விவகாரம்!

Author: Hariharasudhan
24 February 2025, 3:57 pm

திமுகவிடம் காங்கிரஸை செல்வப்பெருந்தகை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர் கூறியுள்ளது உட்கட்சி விவகாரத்தில் தலைதூக்கியுள்ளது.

சென்னை: “திமுகவின் ஆட்சி காமராஜர் ஆட்சிதான்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதற்கு, விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், செல்வப்பெருந்தகையை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்தான் காமராஜர் ஆட்சி என்று இல்லை, நல்லாட்சி நடந்தாலே அது காமராஜர் ஆட்சிதான்” எனக் கூறினார்.

இவ்வாறு தமிழக காங்கிரஸில் உட்கட்சி விவகாரம் தலைதூக்க, கடந்த பிப்ரவரி 18 அன்று சென்னை மாநகராட்சி காங்கிரஸ் தலைவர் திரவியம் தலைமையில், 30க்கும் மேற்பட்ட மாவட்ட தலைவர்கள் டெல்லிக்குச் சென்றனர். அங்கு, அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்த அவர்கள், செல்வப்பெருந்தகையை உடனடியாக மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் அளித்தனர்.

செல்வப்பெருந்தகை Vs மாணிக்கம் தாகூர்: இது தொடர்பாக பிரபல இதழிடம் பேசிய காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள், “நீண்ட காலமாகவே செல்வப்பெருந்தகை, மாணிக்கம் தாகூர் இடையே மோதல் நிலவிவருகிறது. இந்த பிரச்னைக்கான தொடக்கப்புள்ளியே கடந்த சட்டப்பேரவைத் தேர்தல்தான். அப்போது 18 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

Selvaperunthagai Vs Manickam Tagore

இதனையடுத்து, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிக்க பிரின்ஸ், விஜயதரணி, முனி ரத்தினம், ராஜேஷ்குமார் மற்றும் செல்வப்பெருந்தகை ஆகிய எம்எல்ஏக்களிடையே கடும் போட்டி நிலவியது. இதில், ராஜேஷ்குமாரை தலைவராக்க மாணிக்கம் தாகூர் முயன்றார். ஆனால், கார்கே வழியில் செல்வப்பெருந்தகை அந்தப் பதவியைப் பிடித்தார்.

இதையும் படிங்க: நிறைய நெருக்கடிகள்.. நாதகவில் இருந்து காளியம்மாள் விலகல்!

அதுமட்டுமல்லாமல், மாநிலத் தலைவராகவும் செல்வப்பெருந்தகை ஆகிவிட்டார். பிறகு மாநிலத் தலைவரானதும் மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர்களை ஓரங்கட்டத் தொடங்கினார்” எனக் கூறியுள்ளனர். அதேநேரம், இது குறித்து பேசிய மாணிக்கம் தாகூரின் ஆதரவாளரும், வட சென்னை மாவட்டத் தலைவருமான திரவியம், “தொடர்ந்து தொண்டர்களின் விருப்பத்துக்கு எதிராகவே செல்வப்பெருந்தகையின் செயல்பாடு இருக்கிறது. ஆனால், செல்வப்பெருந்தகையோ திமுகவிடம் காங்கிரஸை அடகு வைத்துவிட்டார்” என பகிரங்கமாக தெரிவித்தார்.

இந்த நிலையில், செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “காங்கிரஸ் கட்சி ஒரு ஜனநாயக இயக்கம். கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு தான். தன் மீதான விமர்சனங்களை தாங்கிக் கொள்ள, தான் தயாராக இருக்கிறேன். ஆனால், கட்சியின் மூத்த தலைவர்கள் குறித்து எத்தகைய விமர்சனங்களையும் அனுமதிக்க முடியாது” எனக் கூறியுள்ளது மீண்டும் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Parthiban talks about MGR அடேங்கப்பா.! எம்ஜிஆர்-ன் கருப்பு கண்ணாடி ரகசியம்…போட்டுடைத்த பார்த்திபன்.!
  • Leave a Reply